ஒர்லியில் ரூ.23 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்

மும்பை,
மும்பை ஒர்லி பகுதியில் ஒருவர் போதைப்பொருளுடன் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 27 வயது வாலிபரை போலீசார் பிடித்து சோதனையிட்டனர். இதில் அவர் 56 கிராம் மெபெட்ரோன் என்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருளை வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவருக்கு போதைப்பொருளை சப்ளை செய்தவர் சிவாஜி நகர் பகுதியில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரையும் அதிரடியாக கைது செய்தனர். இவரிடம் இருந்து 60 கிராம் மெபெட்ரான் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு ரூ.23 லட்சம் ஆகும். கைது செய்யப்பட்ட இருவருக்கும் குற்ற பின்னணி உள்ளது. இதில் போதைப்பொருள் சப்ளை செய்தவர் மீது 9 வழக்குள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளன.
இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






