மும்பை விமான நிலையத்தில் ரூ.4½ கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

மும்பை விமான நிலையத்தில் ரூ.4½ கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வெளிநாட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை விமான நிலையத்தில் ரூ.4½ கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வெளிநாட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.
அதிகாரிகள் சோதனை
வெளிநாடுகளில் இருந்து மும்பைக்கு தங்கம் கடத்தி வரப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்க கடத்தலை தடுக்க மும்பை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் துபாயில் இருந்து மும்பை வரும் விமானத்தில் பயணி ஒருவர் அதிகளவில் தங்கம் கடத்தி வர உள்ளதாக மும்பை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் துபாயில் இருந்து மும்பை வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
ரூ.4½ கோடி தங்கம் பறிமுதல்
அப்போது, பயணி ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று, அவரது உடைமைகளில் சோதனை நடத்தினர். அப்போது, உடைமைகளில் அவர் மறைத்து வைத்து கடத்தி வந்த 9 கிலோ எடைகொண்ட 10 தங்க கட்டிகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.4 கோடியே 62 லட்சம் ஆகும்.
இதையடுத்து அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த பயணியை கைது செய்தனர். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






