விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவிதொகை, ரூ.1-க்கு பயிர் காப்பீடு

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவி தொகை மற்றும் ரூ.1-க்கு பயிர் காப்பீடு திட்டம் மராட்டிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவி தொகை மற்றும் ரூ.1-க்கு பயிர் காப்பீடு திட்டம் மராட்டிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
உதவி தொகை
மராட்டிய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு உதவுவதற்காக மாநில அரசு நமோ ஷெத்காரி மகாசன்மான் நிதி திட்டத்தை அறிவித்தது. அதன்மூலம் மாநில அரசு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரத்தை செலுத்தும். இந்த திட்டத்தால் 1.15 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள். அதனால் ரூ.6 ஆயிரத்து 900 கோடி அரசுக்கு நிதி சுமை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு பிரதான் மந்திரி கிருஷி சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் செலுத்தி வருகிறது. மாநில அரசின் புதிய திட்டத்தால் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உதவிதொகையாக கிடைக்கும்.
ஒரு ரூபாய்க்கு காப்பீடு
மத்திய அரசின் பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு பிரீமியத்தில் 2 சதவீதத்தை விவசாயிகள் செலுத்தவேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இனி இந்த சுமை கூட விவசாயிகள் மீது சுமத்தப்படாது, பிரீமியத்தை மாநில அரசே செலுத்தும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் பிரதான் மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தில் பெயரளவில் ரூ.1 மட்டும் செலுத்தி பதிவு செய்தால் போதுமானது. இந்த திட்டத்தால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3312 கோடி நிதி சுமை ஏற்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






