சச்சின் வாசே ஜாமீன் மனு தள்ளுபடி- சிறப்பு கோர்ட்டு உத்தரவு

அனில் தேஷ்முக் தொடர்புடைய பணமோசடி வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாசேவின் ஜாமீன் மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
மும்பை,
அனில் தேஷ்முக் தொடர்புடைய பணமோசடி வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாசேவின் ஜாமீன் மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே காரில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கு மற்றும் வெடிகுண்டு கார் உரிமையாளர் ஹிரன் மன்சுக் கொலை வழக்கில் கைதானவர் போலீஸ் அதிகாரி சச்சின் வாசே. முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் மீதானபண மோசடி தொடர்புடைய வழக்கிலும் அவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.
உள்துறை மந்திரியாக அனில் தேஷ்முக் இருந்தபோது, போலீஸ் அதிகாரி சச்சின் வாசே மூலம் ஓட்டல் மற்றும் பார்களில் இருந்து ரூ.4 கோடியே 70 லட்சம் வசூல் செய்ததாகவும், பின்னர் இந்த பணம் அனில் தேஷ்முக் குடும்பத்தினர் நிர்வகிக்கப்படும் கல்வி அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்டதாகவும் அமலாக்கத்துறை சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
மனு தள்ளுபடி
இந்தநிலையில் முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாசே தனக்கு ஜாமீன் வழங்க வலியுறுத்தி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தது.
பணமோசடி வழக்கில் அவருக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும், அவரை விடுதலை செய்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இதையடுத்து சிறப்பு கோர்ட்டு அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.






