மகா விகாஸ் அகாடி குறித்த சஞ்சய் ராவத் கருத்து தனிப்பட்டது - அஜித்பவார் கூறுகிறார்.


மகா விகாஸ் அகாடி குறித்த சஞ்சய் ராவத் கருத்து தனிப்பட்டது - அஜித்பவார் கூறுகிறார்.
x
தினத்தந்தி 19 Jun 2023 7:15 PM GMT (Updated: 19 Jun 2023 7:15 PM GMT)

மகா விகாஸ் அகாடி கூட்டணி குறித்து நேற்று சஞ்சய் ராவத் எம்.பி. கூறிய கருத்து தனிப்பட்டது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் கூறியுள்ளார்.

புனே,

மகா விகாஸ் அகாடி கூட்டணி குறித்து நேற்று சஞ்சய் ராவத் எம்.பி. கூறிய கருத்து தனிப்பட்டது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் கூறியுள்ளார்.

சஞ்சய் ராவத் பேச்சு

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி கூட்டம் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் செய்தி தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் பேசுகையில், "உத்தவ் தாக்கரே விரும்பும் வரை மகா விகாஸ் அகாடி கூட்டணி இருக்கும்" என்று கூறி இருந்தார். இவரின் கருத்து குறித்து நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் அஜித்பவாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

தனிப்பட்ட கருத்து

சஞ்சய் ராவத் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. ஆனால் கூட்டணி பற்றி இறுதி முடிவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் உத்தவ் தாக்கரே இணைந்து தான் எடுப்பார்கள். இந்த 3 கட்சிகளிலும் ஒன்றாக இணைந்து வந்ததால் தான் ஒரு அரசு அமைக்கப்பட்டது. இல்லையெனில் இது சாத்தியமாகி இருக்காது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா அல்லது வேறு எந்த கட்சியாக இருந்தாலும் தங்கள் தளத்தை விரிவுபடுத்த முழு உரிமை உள்ளது. ஆனால் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்குள் இதை செய்யும்போது அதனால் பா.ஜனதா மற்றும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா பயன் பெற்றுவிட கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

பலம் குறைந்தது

மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி உரிமை கோருமா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "நாங்கள் இதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் நீங்கள் இதை எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்து உள்ளதால், நாங்கள் விரைவில் இதுகுறித்து யோசித்து முடிவு செய்வோம்" என்றார். இதேபோல பருவமழை தாமதமானது மற்றும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து கவலை தெரிவித்த அவர், "கொங்கன் பகுதியில் தண்ணீர் டேங்கர் லாரிகளின் தேவை அதிகரித்து உள்ளது. பருவமழை தாமதத்தால் மாநிலத்தில் சர்க்கரை ஆலைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது" என்றார். 78 உறுப்பினர்களை கொண்ட மேல்-சபையில் பா.ஜனதாவுக்கு அதிகபட்சமாக 22 எம்.எல்.சி.க்கள் உள்ளனர். அதைத்தொடர்ந்து ஒன்றுபட்ட உத்தவ் சிவசேனாவின் 11 எம்.எல்.சி.க்கள் இருந்தனர். அதேபோல தேசியவாத காங்கிரசுக்கு 9 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 8 உறுப்பினர்களும் உள்ளனர். அதுமட்டும் இன்றி சிறிய கட்சிகளை சேர்ந்த 3 பேரும், 4 சுயேட்சைகளும் பதவியில் உள்ளனர். 21 இடங்கள் காலியாக உள்ளன. இந்தநிலையில் உத்தவ் சிவசேனாவை சேர்ந்த எம்.எல்.சி. காயந்தே மற்றும் விப்லோவ் பஜோரியா ஆகியோர் ஷிண்டே அணிக்கு தாவியதால் மேல்-சபையில் உத்தவ் சிவசேனாவின் பலம் குறைந்துள்ளது.


Next Story