பிரவின் ராவத்திடம் இருந்து சஞ்சய் ராவத் மாதந்தோறும் ரூ.2 லட்சம் வாங்கினார்- அமலாக்கத்துறையில் பெண் சாட்சி வாக்குமூலம்


பிரவின் ராவத்திடம் இருந்து சஞ்சய் ராவத் மாதந்தோறும் ரூ.2 லட்சம் வாங்கினார்- அமலாக்கத்துறையில் பெண் சாட்சி வாக்குமூலம்
x
தினத்தந்தி 21 Sep 2022 12:30 AM GMT (Updated: 21 Sep 2022 12:30 AM GMT)

சஞ்சய் ராவத், பிரவின் ராவத்திடம் இருந்து மாதந்தோறும் ரூ.2 லட்சம் வாங்கியதாக பெண் சாட்சி அமலாக்கத்துறையில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

மும்பை,

சஞ்சய் ராவத், பிரவின் ராவத்திடம் இருந்து மாதந்தோறும் ரூ.2 லட்சம் வாங்கியதாக பெண் சாட்சி அமலாக்கத்துறையில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

பத்ராசால் மோசடி

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பத்ரா சால் மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த மாதம் 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் பத்ராசால் மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் தொடர்பான கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து உள்ளது. அதில் சஞ்சய் ராவத்திற்கு எதிராக சாட்சி அளித்த அவரின் முன்னாள் கூட்டாளி சுவப்னா பட்கரின் வாக்குமூலம் சேர்க்கப்பட்டு உள்ளது.

பெண்சாட்சி வாக்குமூலம்

அவர் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- சஞ்சய் ராவத் குடும்பத்தினர் பெயரில் தொடங்கப்பட்ட ஷெல் நிறுவனங்கள் மூலம் கணக்கில் வராத பணத்தை கையாண்டார். சஞ்சய் ராவத் குடும்பத்தினரின் தயாரிப்பு நிறுவனம் தாக்கரே என்ற பெயரில் படத்தை வெளியிட்டது. அந்த திரைப்பட நிறுவனம் மூலம் கணக்கில் வராத பணத்தை படம் தயாரிக்க சஞ்சய் ராவத் பயன்படுத்தினார்.

கடந்த 2015-ல் நான் 'பால்கடு' என்ற படத்தை தயாரித்தேன். அந்த படத்தில் கிடைத்த ரூ.50 லட்சம் லாபத்தை சஞ்சய் ராவத் என்னிடம் இருந்து அபகரித்தார்.

மாதம் ரூ.2 லட்சம்

அலிபாக்கில் ரூ.9 முதல் 10 கோடி மதிப்பிலான நிலத்தை, ரூ.51 லட்சம் என குறைந்த மதிப்பு காட்டி ரொக்கமாக பணம் கொடுத்து வாங்கினார். 2008 முதல் 2014 வரை 2 முறை சாம்னா அலுவலகத்தில் பத்ரா சால் வழக்கின் முக்கிய குற்றவாளியான பிரவின் ராவத்தின் ஊழியர்களை பார்த்து இருக்கிறேன். அவர்கள் சஞ்சய் ராவத்திற்கு பணம் கொடுத்தனர்.

எனக்கு தெரிந்தவரை சஞ்சய் ராவத் கூறுவதன் பேரில் தான் பிரவின் ராவத் செயல்பட்டார். அவர் மாதந்தோறும் ரூ.2 லட்சத்தை சஞ்சய் ராவத்துக்கு கொடுத்தார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story