ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரத்பவார் திடீரென ஹெலிகாப்டரில் பறந்தார்

உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஹெலிகாப்டர் மூலம் மும்பையில் இருந்து ஷீரடி சென்று கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார். மராட்டியத்தில் அரசியல் சூழல் மாறும் என்று அவர் பரபரப்பாக பேசினார்.
மும்பை,
உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஹெலிகாப்டர் மூலம் மும்பையில் இருந்து ஷீரடி சென்று கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார். மராட்டியத்தில் அரசியல் சூழல் மாறும் என்று அவர் பரபரப்பாக பேசினார்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த திங்கட் கிழமை உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள பிரிச் கேண்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 81 வயதான அவர் தொற்று நோய் மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் ஆஸ்பத்திரியில் இருந்து 3 நாட்களில் வீடு திரும்பி, ஷீரடியில் நடைபெறும் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஹெலிகாப்டர் பயணம்
இந்தநிலையில் அவர் நேற்று ஹெலிகாப்டர் மூலம் மும்பை மகாலெட்சுமியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இருந்து அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி சென்றார். அவருடன் டாக்டர் குழுவினரும் சென்றனர். பின்னர் அவர் ஷீரடி நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில், " தற்போது உள்ள சூழல் கண்டிப்பாக மாறும். தேசியவாத காங்கிரசின் கொள்கைகள், திட்டங்கள், நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிக்கப்படும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கட்சியினர் விரும்பினர். கட்சியை தொண்டர்கள் பலப்படுத்த கடுமையாக உழைப்பார்கள். அவர் மாநிலத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். நான் 10 முதல் 15 நாட்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எனவே என்னால் நீண்ட நேரம் பேச முடியாது" என்றார்.
மீண்டும் ஆஸ்பத்திரிக்கு...
இதையடுத்து சரத்பவாரின் உரையை, முன்னாள் உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் வாசித்தார். நேற்று முன்தினம் நடந்த கட்சி கூட்டத்தில் சரத்பவார் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார்.
இந்தநிலையில் நேற்று அவர் ஹெலிகாப்டரில் சென்று நேரடியாக கலந்து கொண்டு உள்ளார். கூட்டத்தில் கலந்து கொண்ட சரத்பவார் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மும்பை வந்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற உள்ளார்.






