ராகுல் காந்தி நடைபயணத்தில் சரத்பவார் கலந்து கொள்ள மாட்டார்- ஆதித்ய தாக்கரே இன்று பங்கேற்பு
ராகுல்காந்தி நடைபயணத்தில் சரத்பவார் கலந்து கொள்ள மாட்டார் என்றும், ஆதித்ய தாக்கரே இன்று பங்கேற்பார் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மும்பை,
ராகுல்காந்தி நடைபயணத்தில் சரத்பவார் கலந்து கொள்ள மாட்டார் என்றும், ஆதித்ய தாக்கரே இன்று பங்கேற்பார் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
நடைபயணம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'பாரத் ஜோடா யாத்ரா' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதில் மராட்டியத்தில் அவரது நடைபயணம் 7-ந் தேதி தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை அவர் நடைபயணம் மேற்கொள்கிறார்.
மராட்டியத்தில் ராகுல்காந்தியின் நடைபயணத்தில் கலந்து கொள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா உத்தவ் தாக்கரே அணி தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
சரத்பவார் கலந்து கொள்ள மாட்டார்
இந்தநிலையில் மராட்டியத்தில் நடைபெறும் ராகுல்காந்தி நடைபயணத்தில் சரத்பவார் கலந்துகொள்ள மாட்டார் என மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், "சமீபத்தில் தான் சரத்பவார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார், டாக்டர் அறிவுறுத்தியதை அடுத்து ஓய்வு எடுத்து வருகிறார். எனவே அவர் நடைபயணத்தில் பங்கேற்க மாட்டார்.
இன்று (வெள்ளிக்கிழமை) முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே ராகுல்காந்தி நடைபயணத்தில் கலந்து கொள்வார்" என்றார்.








