கார் தீப்பிடித்து பெண் பலியான வழக்கில் பரபரப்பு திருப்பம் - மனைவியை எரித்து கொன்று நாடகமாடிய கணவர் கைது


தினத்தந்தி 30 Jun 2023 12:45 AM IST (Updated: 30 Jun 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

கார் தீப்பிடித்து பெண் பலியான வழக்கில் திடீர் திருப்பமாக மனைவியை காரோடு எரித்து கொன்று நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

கார் தீப்பிடித்து பெண் பலியான வழக்கில் திடீர் திருப்பமாக மனைவியை காரோடு எரித்து கொன்று நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

கார் எரிந்து பெண் பலி

மராட்டிய மாநிலம் ஜால்னா மாவட்டம் மான்தா தாலுகாவில் உள்ள கர்லா கிராமத்தை சேர்ந்தவர் அமோல். இவரது மனைவி சவிதா (வயது38). கடந்த 23-ந் தேதி அதிகாலை 4 மணியளவில் கணவன், மனைவி 2 பேரும் புல்தானா மாவட்டம் சென்காவில் உள்ள கஜனன் மகாராஜ் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தனர். ஜால்னா கர்லா பகுதியில் வந்த போது காரில் தீப்பிடித்து சவிதா உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் அமோலிடம் விசாரித்தனர். அவர், " சம்பவத்தன்று கார் கர்லா, லோனர் ரோட்டில் வந்து கொண்டு இருந்தது. அப்போது பின்னால் வந்த சரக்கு வேன் காரில் மோதியது. உடனடியாக நான் காரில் இருந்து இறங்கி வேன் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தேன். அந்த நேரத்தில் விபத்து காரணமாக காரில் திடீரென தீப்பிடித்தது. காரின் கதவுகளை திறந்து மனைவியால் வெளியே வரமுடியவில்லை. நானும் எவ்வளவோ முயற்சி செய்தும் மனைவியை காப்பாற்ற முடியவில்லை" என கூறியிருந்தார்.

காருடன் எரித்து கொலை

அமோலின் வாக்குமூலத்தில் பல்வேறு முரண்பாடுகள் இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் கார் விபத்தில் சிக்கியதற்கான எந்த தடயங்களும் இல்லை. எனவே போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அமோல், மனைவி சவிதாவை காரில் அடைத்து வைத்து தீ வைத்து எரித்து கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அமோல், சவிதாவுக்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து உள்ளது. ஆனால் குழந்தை இல்லை. இதன் காரணமாக அமோல் மனைவியை அடித்து சித்ரவதை செய்து உள்ளார். மேலும் ஆண் குழந்தையை பெற்று தரவில்லை எனில் விவாகரத்து செய்துவிடுவேன் எனவும் மிரட்டி வந்து இருக்கிறார். இந்த விவகாரத்தால் அடிக்கடி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆள்நடமாட்டம் இல்லாத சாலையில்...

இந்தநிலையில் அவர் மனைவியை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டி உள்ளார். இதையடுத்து தான் சம்பவத்தன்று ஆள்நடமாட்டம் இல்லாத சென்காவ்-கர்லா ரோட்டில் மனைவியை காரோடு எரித்து கொலை செய்தது தெரியவந்து உள்ளது. இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அமோலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லாத ஆத்திரத்தில் மனைவியை கணவரே காருடன் எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


1 More update

Next Story