பா.ஜனதாவுடன் சேரும் தவறை சரத்பவார் செய்யமாட்டார்; சஞ்சய் ராவத் நம்பிக்கை


பா.ஜனதாவுடன் சேரும் தவறை சரத்பவார் செய்யமாட்டார்; சஞ்சய் ராவத் நம்பிக்கை
x
தினத்தந்தி 20 Aug 2023 6:45 PM GMT (Updated: 20 Aug 2023 6:45 PM GMT)

பா.ஜனதாவுடன் சேரும் தவறை சரத்பவார் செய்யமாட்டார் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.

மும்பை,

பா.ஜனதாவுடன் சேரும் தவறை சரத்பவார் செய்யமாட்டார் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.

பா.ஜனதாவுடன் சேர மாட்டார்

தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்தது மராட்டிய அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அஜித்பவார் சென்ற பிறகும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் உள்ளார். இதற்கிடையே சமீபத்தில் அவர் அஜித்பவாரை புனேயில் ரகசியமாக சந்தித்து பேசியது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் சரத்பவார் பா.ஜனதாவுடன் சேரும் தவறை செய்ய மாட்டார் என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், அக்கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

மண் கோபுரங்கள்

அஜித்பவார் தனியாக ஒரு கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டால் உண்மையில் அவர் ஒரு பெரிய தலைவர் தான். பா.ஜனதா உதவியுடன் ஏக்நாத் ஷிண்டே செய்தது போல அஜித்பவாரும் செய்தால் அவரது அரசு மண் கோபுரம் போல சரிந்துவிடும். அரசியலில் கோபுரங்கள் தான் முக்கியமே தவிர மண் கோபுரங்கள் அல்ல. சரத்பவாரால் தான் அஜித்பவார் அரசியலில் வளர்ந்தார். தற்போது அவர் சரத்பவாரின் அரசியலை முடிக்க வேலை செய்து வருகிறார். சரத்பவார் பா.ஜனதா, பிரதமர் மோடிக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுத்து உள்ளார். அவர் பா.ஜனதாவுடன் சேரும் தவறை செய்யமாட்டார். இது தனிநபர் பிரச்சினை அல்ல. ஜனநாயகம், சர்வாதிகாரத்துக்கு இடையேயானது.

மரங்கொத்தி அஜித்பவார்

அஜித் பவார் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் நாற்காலியில் துளைபோடும் மரங்கொத்தி பறவை. அந்த பறவைக்கு தேவேந்திர பட்னாவிஸ் பலம் கொடுக்கிறார். அஜித்பவார் முதல்-மந்திரி ஆக வேண்டும் என விரும்புகிறார். பட்னாவிசை ஆதரித்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டேயை சுமையாகவும், கட்சிக்கு இழப்பு ஏற்படுத்தும் நபராகவும் உணர தொடங்கி உள்ளனர். 2024-க்கு பிறகும் நான் தான் முதல்-மந்திரியாக இருப்பேன் என ஏக்நாத் ஷிண்ேட கூறுவதில் உண்மையில்லை. அப்படியிருந்தால் அஜித்பவார் கூட்டணிக்கு அழைத்து வரப்பட்டு இருக்க மாட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story