எங்களுக்கு 22 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்- பா.ஜனதாவுக்கு சிவசேனா வலியுறுத்தல்


எங்களுக்கு 22 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்- பா.ஜனதாவுக்கு சிவசேனா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 May 2023 6:45 PM GMT (Updated: 26 May 2023 6:46 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு கடந்த தேர்தலை போல இந்த தடவையும் 22 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு கடந்த தேர்தலை போல இந்த தடவையும் 22 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

22 தொகுதிகள்

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த தேர்தலில் ஒருங்கிணைந்த சிவசேனா மராட்டியத்தில் 22 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டது. முந்தைய தேர்தலை போல அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் 22 தொகுதிகளை பா.ஜனதா மீண்டும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற நிலைபாட்டில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா உள்ளது.

இது தொடர்பாக சிவசேனாவை சேர்ந்த கஜானன் கிர்திகர் கூறுகையில், "கடந்த தேர்தலில் மராட்டியத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 22 தொகுதிகள் சிவசேனாவுக்கு ஒதுக்கப்பட்டது. அதில் நாங்கள் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். பா.ஜனதா 26 தொகுதிகளில் போட்டியிட்டு 23 தொதிகளை வென்றது. வருகிற தேர்தலிலும் இதேபோன்ற தொகுதி பங்கீடு இருக்க வேண்டும். தேர்தலை சந்திக்க நாங்கள் ஏற்கனவே முன்னேற்பாடு பணிகளை தொடங்கி விட்டோம்" என்றார். சிவசேனா செய்தி தொடர்பாளரும், மந்திரியுமான தீபக் கேசர்கர் கூறுகையில், "கடந்த தடவை தொகுதி பங்கீடு பார்முலாவில் மாற்றம் இருக்காது என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

பா.ஜனதா பதில்

சிவசேனாவின் இந்த கோரிக்கை தொடர்பாக பா.ஜனதா மூத்த மந்திரி சுதீர் முங்கண்டிவாரிடம் கேட்டதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

இதுவரை தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் தொடங்கப்படவில்லை. எந்த பார்முலாவும் வகுக்கப்படவில்லை. ஏக்நாத் ஷிண்டேவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என எந்த பா.ஜனதா தலைவரும் கூறவில்லை. மக்கள் நலனுக்கான ஆட்சியை வழங்க ஏக்நாத் ஷிண்டே, பா.ஜனதாவுடன் கைகோர்த்து உள்ளார். அவரின் கோரிக்கை மதிக்கப்படும். முன்பு பால் தாக்கரேவாலும், தற்போது ஏக்நாத் ஷிண்டேவாலும் வழிநடத்தி வரப்படும் சிவசேனா மீது பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல் பங்கீடு தொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அமர்ந்து பேசுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story