மும்பை-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்கள்; முன்பதிவு இன்று தொடக்கம்


மும்பை-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்கள்; முன்பதிவு இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 9 Aug 2023 6:45 PM GMT (Updated: 9 Aug 2023 6:45 PM GMT)

மும்பை-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்க உள்ளது.

மும்பை,

மும்பை-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்க உள்ளது.

2 சிறப்பு ரெயில்கள்

மத்திய ரெயில்வே சார்பில் திருவிழா காலத்தையொட்டி வேளாங்கண்ணிக்கு 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மும்பை குர்லா லோக்மானிய திலக் டெர்மினலில் இருந்து 01161 எண் கொண்ட சிறப்பு ரெயில் வருகிற 26-ந் தேதி மதியம் 1 மணிக்கு வேளாங்கண்ணிக்கு புறப்படும். அங்கு மறுநாள் இரவு 8.35 மணி அளவில் சென்றடையும். மறுமார்க்கமாக 01162 எண் கொண்ட சிறப்பு ரெயில் வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 28-ந்தேதி காலை 6 மணி அளவில் புறப்பட்டு மறுநாள் லோக்மானிய திலக் டெர்மினலுக்கு மாலை 4.30 மணி அளவில் வந்து சேரும்.

செப்டம்பர் மாதம்

இதேபோல அடுத்த மாதம் (செப்டம்பர்) 6-ந் தேதி 01163 எண் கொண்ட சிறப்பு ரெயில் மும்பை குர்லா லோக்மானிய திலக் டெர்மினலில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு 3-வது நாள் அதிகாலை 12.30 மணி அளவில் வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கமாக செப்டம்பர் மாதம் 8-ந்தேதி 01164 எண் கொண்ட சிறப்பு ரெயில் வேளாங்கண்ணியில் இருந்து காலை 11.50 மணி அளவில் புறப்பட்டு 3-வது நாள் காலை 7 மணி அளவில் லோக்மானிய திலக் டெர்மினல் வந்தடையும்.

நின்று செல்லும் ரெயில் நிலையங்கள்

இந்த சிறப்பு ரெயில்கள் தானே, கல்யாண், லோனாவாலா, புனே, தவுண்ட், சோலாப்பூர், கல்புர்கி, வாடி, ரெய்ச்சூர், மந்திராலயம் ரோடு, குண்டக்கல், தாடிபத்ரி, கடப்பா, ரேணிகுண்டா, காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகளும் இடம்பெற்று இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story