ஆதாரம் இல்லாமல் கணவர் மீது அவதூறு பரப்புவது சித்ரவதைக்கு சமம்- ஐகோர்ட்டு கருத்து


ஆதாரம் இல்லாமல் கணவர் மீது அவதூறு பரப்புவது  சித்ரவதைக்கு சமம்- ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 25 Oct 2022 6:45 PM GMT (Updated: 25 Oct 2022 6:46 PM GMT)

ஆதாரம் இல்லாமல் கணவரை குடிகாரர், பெண் மோகம் கொண்டவர் என அவதூறு பரப்புவது சித்ரவதை செய்வதற்கு சமமானது என மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

மும்பை,

ஆதாரம் இல்லாமல் கணவரை குடிகாரர், பெண் மோகம் கொண்டவர் என அவதூறு பரப்புவது சித்ரவதை செய்வதற்கு சமமானது என மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

கணவர் மீது குற்றச்சாட்டு

புனேயை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிக்கும், அவரது 50 வயது மனைவிக்கும் விவாகரத்து வழங்கி 2005-ம் ஆண்டு குடும்பநல கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ராணுவ அதிகாரியின் மனைவி மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையிடு செய்தார். அந்த மனுவில் 50 வயது பெண், அவரது கணவரான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி குடிகாரர், பெண் மோகம் கொண்டவர் என குற்றம்சாட்டி கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடந்த போது ராணுவ அதிகாரி உயிரிழந்தார். எனினும் ஐகோர்ட்டு அவரின் வாரிசை எதிர்மனுதாரராக சேர்த்து விசாரணை நடத்தியது.

மனுவை நீதிபதிகள் நிதின் ஜாம்தார், சர்மிளா தேஷ்முக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர்.

சித்ரவதைக்கு சமம்

விசாரணையின் போது ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் ராணுவ அதிகாரியிடம் இருந்து அவரது பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளை பிரித்து அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், மனைவி தேவையில்லாமல் கணவரின் குணம் பற்றி பொய்யான குற்றச்சாட்டை கூறுவது சமூகத்தில் அவரின் மதிப்பை கெடுக்கும். இது சித்ரவதைக்கு சமம் என கூறினர்.

மேலும் பெண், ராணுவ அதிகாரிக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களையும் அளிக்காததையும் சுட்டி காட்டிய நீதிபதிகள், "மனுதாரரின் கணவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. மேஜராக இருந்து ஓய்வு பெற்றவர். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருந்தவர். அவரை ஆதரமின்றி குடிக்காரர், பெண் மோகம் கொண்டவர் என குற்றம்சாட்டுவது சமுதாயத்தில் அவருக்கு உள்ள நல்ல பெயரை கெடுக்கும்" என கூறினர்.

மேலும் நீதிபதிகள் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கிய குடும்பநல கோர்ட்டின் உத்தரவை உறுதிப்படுத்தினர்.



Next Story