'பெண் உடை அணிந்து வந்ததால் அவமதிக்கப்பட்டேன்'- மாணவர் சங்க தலைவர் பகீர் குற்றச்சாட்டு

டாடா கல்வி நிறுவன நிகழ்ச்சியில் பெண் உடையில் வந்த மாணவர் சங்க தலைவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் தான் அவமதிக்கப்பட்டதாக அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
மும்பை,
டாடா கல்வி நிறுவன நிகழ்ச்சியில் பெண் உடையில் வந்த மாணவர் சங்க தலைவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் தான் அவமதிக்கப்பட்டதாக அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
பெண் உடையில்...
மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ்(டி.ஐ.எஸ்.எஸ்) கல்வி நிறுவனத்தில் கடந்த 25-ந் தேதி "அம்பேத்கர் தேசியம்" என்ற தலைப்பில் உரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாணவர் சங்க தலைவரான பிரதிக் பார்மே பெண் உடையில் வந்தார். இதனால் அவர் நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தான் அவமதிக்கப்பட்டேன் என்று பிரதிக் பார்மே குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
குட்டை பாவாடை
அம்பேத்கர் நினைவு விரிவுரை நிகழ்ச்சிக்கு மாணவர் சங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் விருந்தினர்களை வரவேற்கவும், சில நடைமுறைகளை மேற்கொள்ளவும் அழைக்கப்பட்டேன். அதற்காக மாலை 6 மணிக்கு குட்டை பாவாடை மற்றும் மேல் அங்கி அணிந்து அங்கு வந்தேன்.
ஆனால் 7 மணி அளவில் பேராசிரியர்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவின் சில உறுப்பினர்களும், இதுபோன்ற நிகழ்வுக்கு நீங்கள் இப்படி உடை அணிந்து வரக்கூடாது என கூறி என்னை தடுத்தனர். உடையில் கட்டுப்பாடு விதிப்பதில் எனக்கு விருப்பமில்லை.
உரிமை, சுதந்திரம் தடுக்கப்பட்டது
நான் ஒரு பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர். அதைதவிர நான் அணிந்திருந்த வித்தியாசமான உடையையும், எனது வினோதமான சைகை காரணமாகவும் அவர்கள் என்னை மேடை ஏற்ற விரும்பவில்லை என்பதை உணர்ந்தேன்.உண்மையில், நான் அவமானப் படுத்தப்பட்டதாகவும் கருதினேன். எனது உரிமையும், சுதந்திரமும் தடுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரதிக் பார்மே தன்னை ஒரு மாற்று பாலினத்தவர் என்று அறிவித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் கருத்து
இது குறித்து டி.ஐ.எஸ்.எஸ். கல்வி நிறுவன பேராசியர் ஒருவர் கூறுகையில், "நாட்டிலேயே பாலின சமத்துவ விதிகளை மதிக்கும் ஒரே நிறுவனம் எங்களுடையது தான். எங்கள் நிறுவனம் அனைத்து அடையாளங்களை கொண்ட மாணவர்களையும் ஒன்றுப்பட்டு வாழ்வதற்காக அனைத்து ஆதரவான வழிமுறைகளையும் கடைப்பிடித்து வருகிறது.
எந்த ஒரு மாணவரும் தங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக உணர்ந்தால் அதை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்வோம்" என்றார்.






