மும்பையில் மக்களை மகிழ்வித்த திடீர் மழை

மும்பையில் நேற்று திடீர் மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.
மும்பை,
மும்பையில் நேற்று திடீர் மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.
திடீர் மழை
மராட்டியத்தில் ஊரகப்பகுதிகளில் கடந்த 2 வாரமாக பருவம் தவறிய மழை பெய்தது. இதன் காரணமாக நாசிக், அவுரங்காபாத், நந்துர்புர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல நூறு ஏக்கர் பரப்பில் வேளாண் பயிர்கள் நாசமாகின.
மும்பையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பொதுமக்கள் துணியால் தலை, முகத்தை மூடியபடி வெளியே நடமாடி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை மும்பையில் திடீர் மழை பெய்தது. மும்பை நகர், கிழக்குப்புறநகர் பகுதியில் லேசான மழை மட்டுமே பெய்தது.
மேற்குபுறநகரில் அதிக மழை
அதேநேரத்தில் மேற்கு புறநகர் பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. கோரேகாவ், மால்வாணி பகுதியில் தலா 2.1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. போரிவிலியில் 1.9 செ.மீ.யும், ஜோகேஸ்வரியில் 1.7 செ.மீ.யும், மரோல் பகுதியில் 1.4 செ.மீ.யும், காந்திவிலியில் 1.2. செ.மீ.யும் மழை பதிவாகியது.
ஒரு சில தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதையும் காண முடிந்தது. திடீர் மழை காரணமாக நேற்று காலை ஓரளவு வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும் மதிய நேரத்தில் வழக்கம் போல வெயில் அதிகமாக இருந்தது.






