மாயமான வழக்கில் திடீர் திருப்பம்: எம்.பி.பி.எஸ். மாணவியை கொலை செய்ததாக உயிர்காக்கும் வீரர் வாக்குமூலம்

ஒரு ஆண்டுக்கு முன் மாயமான எம்.பி.பி.எஸ். மாணவி மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக அவரை கொலை செய்ததாக உயிர்காக்கும் வீரர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். மாணவியின் உடலை தேடும் பணியில் கடற்படையினர் உதவியுடன் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பை,
ஒரு ஆண்டுக்கு முன் மாயமான எம்.பி.பி.எஸ். மாணவி மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக அவரை கொலை செய்ததாக உயிர்காக்கும் வீரர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். மாணவியின் உடலை தேடும் பணியில் கடற்படையினர் உதவியுடன் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
எம்.பி.பி.எஸ். மாணவி மாயம்
மும்பை அருகே உள்ள பொய்சர் பகுதியை சேர்ந்தவர் சதிச்சா சானே(வயது22). இவர் மும்பையில் உள்ள கிரான்ட் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். 2021-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பிறகு அவரை காணவில்லை.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் பொய்சர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கடைசியாக மாணவி பாந்திரா பேண்டு ஸ்டாண்டு பகுதியில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பாந்திரா போலீசாருக்கு மாற்றப்பட்டது.
மாணவி சம்பவத்தன்று காலை விராரில் இருந்து ரெயில் மூலம் அந்தேரி வந்துள்ளார். அந்தேரியில் இருந்து மற்றொரு ரெயில் மூலம் அவர் பாந்திரா சென்றார். ரெயில்நிலையத்தில் இருந்து பேண்டு ஸ்டாண்டு பகுதிக்கு ஆட்டோவில் வந்து இறங்கி இருக்கிறார். நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 3 மணி வரை அவர் கடற்கரையில் சுற்றி திரிந்து உள்ளார். அதன்பிறகு அவர் என்ன ஆனார் என்பது மர்மமாக இருந்தது.
வழக்கில் திடீர் திருப்பம்
போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவ மாணவியுடன் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை கடற்கரை உயிர்காக்கும் வீரர் (லைப்கார்டு) மித்துசுக் தேவ்சிங் (32) இருந்தது தெரியவந்து உள்ளது. போலீசார் கடந்த ஒரு ஆண்டில் பல முறை மித்துசுக் தேவ் சிங்கிடம் விசாரணை நடத்தினர். ஆனால் மாணவி தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் மீண்டும் மித்துசுக் தேவ் சிங்கை காவலில் எடுத்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் மாணவியை கொலை செய்ததை ஒப்புகொண்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மித்துசுக் தேவ் சிங் மாணவியை கொலை செய்ததை ஒப்புகொண்டு உள்ளார். இதற்கு மேல் இந்த வழக்கில் தற்போது எதுவும் கூற முடியாது" என்றார்.
மித்துசுக் தேவ் சிங் கடற்கரையை பற்றி நன்கு அறிந்தவர் ஆவார். எனவே அவர் மாணவியின் உடல் கிடைக்காத வகையில் அப்புறப்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாந்திரா பாண்டு ஸ்டாண்டு பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விழுந்த இளம்பெண்ணின் உடல் கிடைக்கவே இல்லை. அந்த இடத்தில் அவர் மாணவியின் உடலையும் வீசி இருக்கலாம் என கூறப்படுகிறது.
கடற்படை தேடுதல் வேட்டை
போலீசார் மித்துசுக் தேவ்சிங்கிற்கு உடலை அப்புறப்படுத்த உதவியதாக அப்துல் ஜாபர் அன்சாரி என்ற வாலிபரையும் கைது செய்து உள்ளனர். நேற்று முன்தினம் போலீசார் 2 பேரையும் தனித்தனியாக சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
நேற்று போலீசார் கடற்படை உதவியுடன் சம்பவ இடத்தில் சதிச்சா சானேவின் உடலை தேடினர். கடற்படை நீச்சல் வீரர்கள் கடலுக்கு அடியில் சென்று மாணவியின் உடல் பாகங்கள் எதுவும் கிடைக்கிறதா என தேடினர். இதன் காரணமாக பாந்திரா பேண்டு ஸ்டாண்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






