ஜல்னாவில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் திடீர் வன்முறை - 12 போலீசார் காயம்
ஜல்னாவில் மராத்தா இடஒதுக்கீடு கேட்டு நடந்த போராட்டத்தில் வெடித்த திடீர் வன்முறையில் 12 போலீசார் காயமடைந்தனர்.
ஜால்னா,
ஜல்னாவில் மராத்தா இடஒதுக்கீடு கேட்டு நடந்த போராட்டத்தில் வெடித்த திடீர் வன்முறையில் 12 போலீசார் காயமடைந்தனர்.
வன்முறை
ஜல்னா மாவட்டம் அம்பாட் தாலுகாவில் மராத்தா சமூகத்தை சேர்ந்த சிலர் 29-ந்தேதி முதல் இடஒதுக்கீடு கேட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களாக போராட்டம் நடைபெற்றுவந்த நிலையில் நேற்று போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றதாக தெரிகிறது. அப்போது போராட்டக்காரர்கள் சிலர் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதைத்தொடர்ந்து துலே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில் சென்ற அரசு பஸ் உள்பட சில வாகனங்கள் ஆங்காங்கே வழியிலேயே நிறுத்தப்பட்டன. பயணிகளும் கீழே இறக்கி விடப்பட்டனர். இந்த நிலையில் சில விஷமிகள் அரசு பஸ்சை தீ வைத்து எரித்தனர்.
போலீசார் காயம்
நிலைமை எல்லை மீறி சென்றதை அடுத்து கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கலவரக்காரர்களை கலைத்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் கலவரக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் 12 போலீசார் காயமடைந்தனர். இதில் பெண் போலீசாரும் அடங்குவர். காயமடைந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உள்துறையை தன்வசம் வைத்திருக்கும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.