சிவசேனா கட்சி சொத்துக்களை முதல்-மந்திரி ஷிண்டே தரப்பிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சிவசேனா கட்சி சொத்துக்களை  முதல்-மந்திரி ஷிண்டே தரப்பிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 April 2023 6:45 PM GMT (Updated: 28 April 2023 6:46 PM GMT)

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பிடம் சிவசேனா கட்சி சொத்துக்களை ஒப்படைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பிடம் சிவசேனா கட்சி சொத்துக்களை ஒப்படைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

சிவசேனாவில் பிளவு

மராட்டியத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டதால், அரசியல் பூகம்பம் ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை இழந்தார். சிவசேனாவை சேர்ந்த மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார்.

இந்த நிலையில் சிவசேனா கட்சியின் பெயர், சின்னத்தை முதல்-மந்திரி ஷிண்டே தரப்புக்கு வழங்கி கடந்த சில மாதங்களுக்கு முன் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டது. இது உத்தவ் தாக்கரே தரப்புக்கு பின்னடைவாக அமைந்தது.

சொத்து விவகாரம்

இந்த நிலையில் ஆஷிஸ் கிரி என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், "சிவசேனா கட்சியின் சொத்துக்களை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பிடம் ஒப்படைக்க மராட்டிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார். இந்த மனு நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "நீங்கள் யார்?, உங்கள் இடம் என்ன?" என்று மனுதாரரை பார்த்து சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story