சிவசேனாவின் பிளவு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நாட்டின் ஜனநாயக எதிர்காலத்தை தீர்மானிக்கும்- உத்தவ் தாக்கரே பேச்சு


சிவசேனாவின் பிளவு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நாட்டின் ஜனநாயக எதிர்காலத்தை தீர்மானிக்கும்- உத்தவ் தாக்கரே பேச்சு
x

சிவசேனாவின் பிளவு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நாட்டின் ஜனநாயக எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று உத்தவ் தாக்கரே பேசினார்.

மும்பை,

சிவசேனாவின் பிளவு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நாட்டின் ஜனநாயக எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று உத்தவ் தாக்கரே பேசினார்.

கட்சியில் சேர்ந்தனர்

சுற்றுச்சூழல் ஆர்வலரான சுஷ்மா அந்தாரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த எம்.பி. பாவனா காவ்லியின் முன்னாள் கணவர் பிரசாந்த் சுர்வே ஆகியோர் இன்று மாதோஸ்ரீயில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து தங்களை அந்த கட்சியில் இணைத்து கொண்டனர்.

சுஷ்மா அந்தாரே சிவசேனாவின் துணை தலைவராக நியமிக்கப்படுவதாக உத்தவ் தாக்கரே அறிவித்தார். பிரசாந்த் சுர்வே வாஷிம் மாவட்ட கட்சி விவகாரங்களை கையாள்வார் என சிவசேனா எம்.பி. வினாயக் ராவத் கூறினார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

இந்துத்வா கொள்கை

சிவசேனா கட்சி சட்டம் மற்றும் அரசியலமைப்பு சாசன போரை புரிந்து வருகிறது. சிவசேனாவில் ஏற்பட்டு உள்ள பிளவு தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் உள்ளது. இந்த வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சிவசேனா கட்சியின் எதிர்காலத்தை மட்டும் அல்ல, நாட்டின் ஜனநாயக எதிர்காலத்தையும் தீர்மானிக்க உள்ளது. அரசியலமைப்பு சாசனத்தை பாதுகாக்கும் நேரமிது.

சிவசேனாவின் இந்துத்வா கொள்கை என்பது தேசியவாதத்தை சார்ந்தது. அரசியலில் ஏற்ற, இறங்கங்கள் இருக்கும். வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்டவர்கள் சிவசேனாவில் சேருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

சாதாரண தொண்டர்களை தேடி..

சாதாரண மக்கள் (சிவசேனா எம்.எல்.ஏ.க்கள்) அசாதாரணமாக மாறி விட்டார்கள். அவர்கள் தற்போது கட்சியை விட்டு வெளியேறி விட்டனர். சிவசேனாவில் இப்போது மிகவும் சாதாரண தொண்டர்களை தேடி செல்கிறோம். அவர்களின் திறனை உணருவதற்கான நேரம் இது.

நாங்கள் எங்கள் உண்மையான சிவசேனாவை மீண்டும் கட்டி எழுப்புகிறோம். கிராமப்புற பெண்களின் தலைமைத்துவ திறன்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

--------------


Next Story