மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவேற்றம் செய்த வாலிபர் கைது

செல்போன் நம்பர் தராத மாணவியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக பதிவேற்றம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வசாய்,
செல்போன் நம்பர் தராத மாணவியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக பதிவேற்றம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆபாச குறுந்தகவல்
பால்கர் மாவட்டம் வசாயை சேர்ந்த 10-ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் இருந்து அடையாளம் தெரியாத நம்பர்களில் இருந்து ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பி தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் அந்த மாணவி சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் விசாரித்ததில் இன்்ஸ்டாகிராமில் மாணவியின் புகைப்படத்தில் பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என ஆபாசமாக பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனால் போலீசார் ஆபாசமாக பதிவேற்றம் செய்த நபர் யார் என்பது குறித்து விசாரித்தனர்.
வாலிபர் கைது
இதில் மாணவியிடம் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் அறிமுகமான பிவண்டியை சேர்ந்த பாபட் சேக் (வயது19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவியிடம் செல்போன் நம்பரை பாபட் சேக் கேட்டு உள்ளார். இதற்கு மாணவி தர மறுத்ததால் ஆத்திரத்தில் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவர் இதே போன்று மற்ற சிறுமிகள், பெண்களை துன்புறுத்தி உள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.