பாந்திரா மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி- சிறுவன் படுகாயம்

பாந்திரா மேம்பாலத்தில் 40 அடி உயரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்த வாலிபர் பலியானார். சிறுவன் படுகாயம் அடைந்தான். போலீசாரிடம் சிக்காமல் இருக்க முயன்றபோது இந்த விபரீதம் நடந்தது.
மும்பை,
பாந்திரா மேம்பாலத்தில் 40 அடி உயரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்த வாலிபர் பலியானார். சிறுவன் படுகாயம் அடைந்தான். போலீசாரிடம் சிக்காமல் இருக்க முயன்றபோது இந்த விபரீதம் நடந்தது.
பாலத்தில் இருந்து விழுந்தனர்
மும்பை பாந்திரா மேம்பாலத்தில் சம்பவத்தன்று அதிகாலை போலீசார் வாகன சோதனைக்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது அப்துல் அகத் சேக்(வயது18) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் சிறுவனுடன் வந்தார். அங்கு போலீசார் நிற்பதை கண்டு தப்பிக்க முயன்றார். இதற்காக மோட்டார் சைக்கிளை வலதுபுறமாக திருப்பினார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதனால் நிலைகுலைந்த அப்துல் அகத் சேக், சிறுவனுடன் பாலத்தின் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
வாலிபர் பலி
இதில் படுகாயம் அடைந்த இருவரையும் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அப்துல் அகத்சேக் உயிரிழந்தார். படுகாயமடைந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இதுகுறித்து பாந்திரா போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், பலியான அப்துல் அகத்சேக் ஹெல்மெட் அணியாமலும், வாகன உரிமம் இன்றியும் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றுள்ளார். எதிர்பாராதவிதமாக போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.






