கிர்காவ் குடோனில் பயங்கர தீ- 14 வாகனங்கள் எரிந்து நாசம்

கிர்காவ் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொருட்கள் உள்பட அருகே நிறுத்தப்பட்டு இருந்த 14 வாகனங்கள் எரிந்து நாசமானது.
மும்பை,
கிர்காவ் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொருட்கள் உள்பட அருகே நிறுத்தப்பட்டு இருந்த 14 வாகனங்கள் எரிந்து நாசமானது.
தீ விபத்து
மும்பை கிர்காவ் அங்குர்வாடி பகுதியில் மூங்கில் கம்புகள், ரெக்சின் உள்பட பல பொருட்கள் அடங்கிய குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை யாரும் கவனிக்காததால் தீ குடோன் முழுவதும் பற்றி எரிந்தது.
மேலும் குடோன் அருகே நிறுத்தப்பட்டு இருந்த கார்களில் பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் காரில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர். இதில் முடியாமல் போனதால் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
14 வாகனங்கள் எரிந்து நாசம்
இதன்பேரில் 5 வாகனங்களில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் குடோனில் பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தினால் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 6 கார்கள், 8 மோட்டார் சைக்கிள்கள் உள்பட குடோனில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






