கார் கால்வாயில் பாய்ந்தது; 6 பேர் பலி- அமராவதியில் பயங்கர விபத்து


கார் கால்வாயில் பாய்ந்தது; 6 பேர் பலி- அமராவதியில் பயங்கர விபத்து
x

அமராவதியில் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு கார் கால்வாயில் பாய்ந்தது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

மும்பை,

அமராவதியில் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு கார் கால்வாயில் பாய்ந்தது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

கால்வாயில் பாய்ந்து விபத்து

அமராவதி மாவட்டம் பரத்வாடா- பைத்துல் நெடுஞ்சாலையில் நேற்று இரவு பரத்வாடாவில் இருந்து பைத்துல் பகுதியை நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டு இருந்தது.

இந்த கார் அங்குள்ள நிம்போரா பாடா வளைவு அருகே வந்தபோது திடீரென முன்னால் சென்றுகொண்டு மோட்டார் சைக்கிளில் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளுடன் அதில் பயணித்த 2 பேரும் கால்வாயில் தூக்கி வீசப்பட்டனர்.

இதைதொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த காரும் சாலையில் தாறுமாறாக ஓடி பாலத்தில் இருந்து கால்வாய்க்குள் பாய்ந்து விபத்தில் சிக்கியது.

6 பேர் பலி

இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரில் 4 பேரும், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இருப்பினும் இரவில் விபத்து நடந்ததால் அங்கு வாகனங்கள் எதுவும் செல்லாததால் விபத்து குறித்து யாருக்கும் தெரியவரவில்லை.

இந்த நிலையில் இரவு 11.40 மணி அளவில் அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் காரில் உதிரி பாகங்கள் மற்றும் இருக்கைகள் சாலையில் சிதறிக்கிடப்பதை கண்டனர். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் ஓடையில் பார்த்தபோது அங்கு அங்கு காரும், மோட்டார் சைக்கிளும் நொறுங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்ட போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஒருவரை மீட்டு அச்சல்ப்பூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மங்கிய வெளிச்சம்

இதேபோல இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விபத்தை கண்டறிந்த 2 மணி நேரத்திற்கு முன்பே விபத்து நடைபெற்று இருக்கலாம் என தெரிகிறது.

மேலும் கனமழை, மங்கிய வெளிச்சம் போன்ற காரணங்களால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story