பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கூறிய வழக்கு; குரல் மாதிரி சோதனைக்கு விஞ்ஞானியின் அனுமதி தேவையில்லை - கோர்ட்டில் போலீசார் தகவல்

பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கூறிய வழக்கில் கைதான விஞ்ஞானிக்கு குரல் மாதிரி, உளவியல் சோதனை மேற்கொள்ள அவரது அனுமதி தேவையில்லை என கோர்ட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.
மும்பை,
பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கூறிய வழக்கில் கைதான விஞ்ஞானிக்கு குரல் மாதிரி, உளவியல் சோதனை மேற்கொள்ள அவரது அனுமதி தேவையில்லை என கோர்ட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.
விஞ்ஞானி கைது
புனேயில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டி.ஆர்.டி.ஒ.) விஞ்ஞானியாக இருப்பவர் பிரதீப் குருல்கர். இவர் ஆபாச வீடியோ கால் வலையில் சிக்கி பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்த பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை கூறியதாக கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். விஞ்ஞானி அந்த பெண் மூலம் வாட்ஸ்அப் கால், வீடியோ கால், வாய்ஸ் மெசேஜ் மூலம் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு இந்திய பாதுகாப்பு துறை ரகசியங்களை தெரிவித்து உள்ளார். கடந்த மாதம் அவருக்கு எதிராக கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.
அனுமதி தேவையில்லை
இந்தநிலையில் அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை, குரல் மாதிரி சோதனை, உளவியல் சோதனை மேற்கொள்ள குற்றம்சாட்டப்பட்ட விஞ்ஞானியின் ஒப்புதல் பெற்று தரும்படி கோர்ட்டில் போலீசார் தொிவித்து இருந்தனர். இதற்கு விஞ்ஞானி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுபோன்ற சோதனைகள் தேவையில்லாதது, அடிப்படை உரிமையை மீறும் செயல் என விஞ்ஞானி தரப்பு வக்கீல் கோர்ட்டில் கூறினார். இந்தநிலையில் இதற்கு பதில் அளித்தபோலீசார் தாக்கல் செய்த அறிக்கையில், " உண்மை கண்டறியும் சோதனைக்கு மட்டுமே குற்றம்சாட்டப்பட்டவரின் ஒப்புதல் தேவை. குரல் மாதிரி சோதனை, உளவியல் சோதனை மேற்கொள்ள குற்றம்சாட்டப்பட்டவர் சம்மதம் தேவையில்லை " என கூறப்பட்டு இருந்தது.






