அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய பெண் உள்பட 2 பேர் கைது


அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Jun 2023 7:45 PM GMT (Updated: 27 Jun 2023 7:45 PM GMT)

அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தானே,

அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாக்குதல்

மும்பை போரிவிலியில் இருந்து அரசு பஸ் ஒன்று தானே நோக்கி நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் புறப்பட்டு சென்றது. தானேயில் உள்ள தின்ஹாத் நாக்கா அருகே நள்ளிரவு 12.20 மணி அளவில் பஸ் வந்த போது முன்னால் சென்ற கார் பஸ்சுக்கு வழிவிடாமல் மெதுவாக சென்றது. இதனால் பஸ் டிரைவர் வழிவிடுமாறு ஹாரனை அழுத்தினார். இதற்கு செவிசாய்க்காமல் சென்ற நபர் காரை நடுவழியில் நிறுத்தினார். காரில் இருந்து அவரும், ஒரு பெண்ணும் கீழே இறங்கி வந்து பஸ்சில் ஏறினர். பின்னர் டிரைவர் மற்றும் கண்டக்டரை பிடித்து தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களை தாக்கிய நபர் பஸ்சில் இருந்து கீழே இறங்கி வந்து காரை எடுக்க சென்றார். ஆனால் பஸ்சில் இருந்து பெண் கீழே இறங்கவில்லை.

அதிரடி கைது

இதனால் பஸ் டிரைவர் உடனே பஸ்சை வேகமாக இயக்கினார். உள்ளே இருந்த பெண் சத்தம் போட்டு உள்ளார். இதனை பொருட்படுத்தாத பஸ் டிரைவர் நேராக நவ்பாடா போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு நடந்த சம்பவத்தை போலீசாரிடம் தெரிவித்தார். இதன்படி போலீசார் அப்பெண்ணை பிடித்து கைது செய்தனர். பஸ்சை பின்தொடர்ந்து காரில் வந்த நபரையும் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அவர்களது பெயர் சுருஷ்டி பவார் மற்றும் ஓம்கார் மோதக் என்பது தெரியவந்தது. இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.



Next Story