பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டம் எனக்கு சிரிப்பை ஏற்படுத்தியது - பிரபுல் படேல் சொல்கிறார்

பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டம் சிரிப்பை ஏற்படுத்தியதாக பிரபுல் படேல் பேசினார்.
மும்பை,
பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டம் சிரிப்பை ஏற்படுத்தியதாக பிரபுல் படேல் பேசினார்.
பாட்னாவில் எதிர்க்கட்சி கூட்டம்
நாட்டில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளன. இதற்காக பாட்னாவில் சமீபத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டம் நடத்தியது. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் செயல் தலைவர் பிரபுல் படேல் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். தற்போது தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் பிரபுல் படேல், அஜித்பவார் அணியில் உள்ளார். நேற்று மும்பையில் அஜித்பவார் கூட்டிய கூட்டத்தில் கலந்துகொண்ட பிரபுல் படேல், பாட்னாவில் தான் கலந்துகொண்ட எதிர்க்கட்சிகள் கூட்டத்தை நினைவுகூர்ந்து பேசியதாவது:-
சிரிப்பு வந்தது...
பட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு சரத்பவாருடன் சென்றிருந்தேன். அங்கு வந்திருந்த கட்சிகளை பார்க்கையில் எனக்கு சிரிப்பு வந்தது. அங்கு 17 எதிர்க்கட்சிகள் வந்திருந்தன. அவற்றில் 7 கட்சிகளுக்கு நாடாளுமன்ற மக்களவையில் ஒரே ஒரு எம்.பி. மட்டும் உள்ளன. நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் கூட இல்லாத ஒரு கட்சியும் அங்கு இருந்தது. ஆனால் அவர்கள் மாற்றத்தை கொண்டு வருவோம் என்று கூறுகின்றனர்.
தேசிய நலன்
நான் ஏன் அஜித்பவாரின் பக்கம் நின்றேன் என அறிய விரும்புகிறார்கள். இந்த கேள்விக்கு நான் சரியான நேரத்தில் பதில் அளிப்பேன். கடந்த ஆண்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தபோது அனைத்து தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், மந்திரிகளும் சரத்பவாரிடம் பா.ஜனதாவுடன் இணையுமாறு கேட்டுக்கொண்டனர். சிவசேனாவின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ளும்போது பா.ஜனதாவுடன் செல்வதில் என்ன ஆட்சேபனை எழப்போகிறது? மராட்டியத்தில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சியில் நாங்கள் சேர முடிவு செய்தது தேசிய நலன் மற்றும் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு தானே தவிர, தனிப்பட்ட லாபத்திற்காக இந்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






