எதிர்க்கட்சிகள் கூட்டணி மூலம் தாய் மண்ணை நேசிக்கும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன - உத்தவ் தாக்கரே பேட்டி


எதிர்க்கட்சிகள் கூட்டணி மூலம் தாய் மண்ணை நேசிக்கும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன - உத்தவ் தாக்கரே பேட்டி
x
தினத்தந்தி 19 July 2023 7:00 PM GMT (Updated: 19 July 2023 7:00 PM GMT)

எதிர்க்கட்சிகள் கூட்டணி மூலமாக நாட்டையும், தாய் மண்ணையும் நேசிக்கும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மும்பை,

எதிர்க்கட்சிகள் கூட்டணி மூலமாக நாட்டையும், தாய் மண்ணையும் நேசிக்கும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் கூட்டம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணியை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணி கட்சிகளின் 2-வது கூட்டம் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி கூட்டணி(இந்தியா) என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் கலந்து கொண்டார். இது குறித்து முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சர்வாதிகாரத்துக்கு எதிரானது

எதிர்க்கட்சிகளின் இந்த போராட்டம் எந்த ஒரு தனிநபருக்கோ அல்லது கட்சிக்கோ எதிரானது இல்லை. இந்த போராட்டம் சர்வாதிகாரத்திற்கு எதிரானது. தலைவர்கள், பிரதமர்கள், முதல்-மந்திரிகள் வருவார்கள், செல்வார்கள். ஆனால் அவர்கள் உருவாக்கும் முன்னுதாரணம் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. எனவே நாட்டையும், தாய்மண்ணையும் நேசிக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. சர்வாதிகாரத்துக்கு எதிரான வலுவான கூட்டணி உருவாகி உள்ளது. முதலில் இந்த கூட்டணிக்கு, "இந்திய தேசிய ஜனநாயக உள்ளடங்கிய கூட்டணி" என பெயரிடவே திட்டப்பட்டது. ஆனால் இந்த பெயர் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி போலவே இருப்பதாக சில தலைவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 'ஜனநாயகம்' என்ற வார்த்தை பின்பு 'வளர்ச்சி' என மாற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் யார்?

மேலும் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களிடம் கூறுகையில், "2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க உருவாக்கப்பட்ட இந்திய தேசிய வளர்ச்சி கூட்டணியின்(இந்தியா) அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது. நாட்டில் சர்வாதிகாரத்தை இந்த கூட்டணி தோற்கடிக்கும். 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த பிறகுதான் பா.ஜனதாவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி நினைவுக்கு வந்துள்ளது. அடுத்த பிரதமர் யார் என்பதை 'இந்தியா' கூட்டணி தீர்மானிக்கும்" என்றார்.



Next Story