பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான இரு குழந்தைகள் சட்டம் வளர்ப்பு குழந்தைகளுக்கு பொருந்தாது - ஐகோர்ட்டு உத்தரவு


பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான இரு குழந்தைகள் சட்டம் வளர்ப்பு குழந்தைகளுக்கு பொருந்தாது - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Aug 2023 7:15 PM GMT (Updated: 20 Aug 2023 7:15 PM GMT)

பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு 2 குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சட்டம் வளர்ப்பு குழந்தைகளுக்கு பொருந்தாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

மும்பை,

பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு 2 குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சட்டம் வளர்ப்பு குழந்தைகளுக்கு பொருந்தாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

தகுதி நீக்கம்

கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாது என்று கிராம பஞ்சாயத்து சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தின்படி 3 குழந்தைகள் இருப்பதாக காரணம் காட்டி கைருனிசா சேக் சந்த் என்ற கிராம பஞ்சாயத்து உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இதை எதிர்த்து அவர் ஐகோர்ட்டின் நாக்பூர் கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், "எனது கணவர் சேக் சந்துக்கு முந்தைய திருமணத்தில் 2 மகன்கள் இருக்கிறார்கள். ஆனால் திருமணத்தின் மூலமாக எனக்கு ஒரேஒரு குழந்தை மட்டுமே இருக்கிறது. எனவே எனது தகுதி நீக்கம் நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும்" என்று கூறியிருந்தார்.

டிவிஷன் அமர்வுக்கு மாற்றம்

இந்த மனுவை விசாரித்த ஒரு நபர் அமர்வு, கிராம பஞ்சாயத்து சட்டத்தில் 2 குழந்தைகள் என்ற சொல், வளர்ப்பு குழந்தைகளையும் குறிக்கும் பொதுவான சொல்லா? அல்லது அவருக்கு பிறந்த குழந்தைகளை மட்டுமே குறிக்குமா? என தௌிவுபடுத்துமாறு கூறி டிவிஷன் அமர்வுக்கு மாற்றியது. இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.எஸ். சந்தூர்கர் மற்றும் விருஷாலி ஜோஷி அடங்கிய டிவிஷன் அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:-

வளர்ப்பு குழந்தைகள்

ஒரு பஞ்சாயத்து உறுப்பினருக்கு 2 குழந்தைகள் என்ற கணக்கு, ஆணாக இருந்தால் அவருடைய முந்தைய மற்றும் அல்லது தற்போதைய திருமணங்களை கருத்தில் கொள்ளாமல், மொத்தத்தில் அவர் மூலம் 2 குழந்தைகளுக்கு மேல் பிறந்திருந்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார். அதேபோல பெண் பஞ்சாயத்து உறுப்பினர் என்ற முறையில் அவரது முந்தைய அல்லது தற்போதைய திருமணத்தால் பிறந்தவர்கள் என்பதை கணக்கில் வைத்துகொள்ளாமல், அவர் பெற்றெடுத்த அனைத்து குழந்தைகளும் அந்த கணக்கில் அடங்கும். ஆணோ, பெண்ணோ முந்தைய திருமணத்தில் குழந்தையை பெற்றெடுத்திருந்தால், அதற்கு அடுத்த திருமணத்தில் மீண்டும் குழந்தை பெற்றால் தகுதி நீக்கம் செய்யப்படலாம். ஆனால் வளர்ப்பு குழந்தைகள் இந்த கணக்கில் வராது. 2 குழந்தைகளுக்கு மேல் பெற்ற ஒருவரை தகுதி நீக்கம் செய்வதே இந்த விதியின் நோக்கமே தவிர முந்தைய திருமணத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் குழந்தை உள்ள நபரை மறுமணம் செய்வதை தடுப்பதோ, அதை குறை கூறுவதோ இதன் நோக்கம் இல்லை. இவ்வாறு அவர்கள் தீர்ப்பில் கூறினர்.


Next Story