மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 75 சதவீதத்தை தாண்டியது

மும்பையில் ஏரிகளின் நீர்மட்டம் 75 சதவீதத்தை தாண்டி உள்ளது.
மும்பை,
மும்பையில் ஏரிகளின் நீர்மட்டம் 75 சதவீதத்தை தாண்டி உள்ளது.
வேகமாக நிரம்பியது
மும்பையில் நடப்பாண்டில் பருவ மழைக்காலம் மிகவும் தாமதமாக தொடங்கியது. நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 5 சதவீதம் அளவுக்கு சென்றது. இதன்காரணமாக கடந்த மாதம் 1-ந் தேதி முதல் நகரில் 10 சதவீதம் குடிநீர் குறைப்பு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே ஜூன் மாதக்கடைசியில் மும்பையில் பருவ மழைக்காலம் தொடங்கி மழை கொட்டி தீர்த்தது. இதேபோல கடந்த மாதமும் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் மும்பை வெள்ளத்தில் தத்தளித்தது. இதன் காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்தது. நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் துல்சி, விகார், தன்சா, மோதக் சாகர் நிரம்பி உள்ளன. மேல் மற்றம் மத்திய வைத்தர்னா, பட்சா ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகிறது.
75 சதவீதத்தை தாண்டியது
மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 14 லட்சத்து 47 ஆயிரத்து 363 மில்லியன் லிட்டர் ஆகும். இதில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரிகளில் 11 லட்சத்து 7 ஆயிரத்து 181 மில்லியன் லிட்டர் தண்ணீர் உள்ளது. அதாவது மொத்த கொள்ளளவில் 76.50 சதவீதம் நிரம்பி உள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு இதே நேரத்தில் ஏரிகளில் 88.80 சதவீதம் தண்ணீர் இருந்தது. 2021-ல் 75.62 சதவீதம் தண்ணீர் இருந்தது. ஏரிகளின் நீர்மட்டம் 75 சதவீதத்தை தாண்டி இருப்பதை அடுத்து, மும்பையில் அமலில் உள்ள 10 சதவீத குடிநீர் குறைப்பு ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த மழை எச்சரிக்கை
இதற்கிடையே மும்பையில் ஒரு சில இடங்களில் இன்று(புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதற்காக நகரில் 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தானே, பால்கர் மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள், நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராய்காட் மாவட்டத்துக்கு 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






