காங்கிரஸ் மூழ்கும் கப்பல் என தெரிந்தவர்கள் அதில் இருந்து வெளியேறுகிறார்கள்- தேவேந்திர பட்னாவிஸ் கருத்து


காங்கிரஸ் மூழ்கும் கப்பல் என தெரிந்தவர்கள் அதில் இருந்து வெளியேறுகிறார்கள்- தேவேந்திர பட்னாவிஸ் கருத்து
x

காங்கிரஸ் மூழ்கும் கப்பல் என தெரிந்தவர்கள், அதில் இருந்து வெளியேறுகிறார்கள் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மும்பை,

காங்கிரஸ் மூழ்கும் கப்பல் என தெரிந்தவர்கள், அதில் இருந்து வெளியேறுகிறார்கள் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மூழ்கும் கப்பல்

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நேற்று முன்தினம் கட்சியில் இருந்து விலகினார். இதுதொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 5 பக்க கடிதத்தை எழுதி இருந்தார். அதில் அவர் ராகுல் காந்திக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். குறிப்பாக ராகுல் குழந்தை தனமாகவும், முதிர்ச்சியின்றி செயல்பட்டதாகவும் தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பாக மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நாக்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

குலாம் நபி ஆசாத் எழுப்பிய சில கேள்விகள் நியாயமானவை. எனினும் இது அவர்களின் உள்கட்சி பிரச்சினை. எனவே அதுகுறித்து நான் கூற மாட்டேன். அதேநேரத்தில் காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல். அது கரைசேராது என தெரிந்தவர்கள் வெவ்வேறு பாதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிவசேனா மீது தாக்கு

இதேபோல சிவசேனா, மராத்தா சமூக அமைப்பான சம்பாஜி பிரிகடேயுடன் கூட்டணி அமைத்தது குறித்து கேட்ட போது, "ஒருவர் வீழ்ச்சிபாதையில் இருக்கும்போது புத்திசாலிதனமாக யோசிக்கமாட்டார்கள்" என்று தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்தார்.

மேலும் சிவசேனாவின் தசரா பொதுக்கூட்டம் குறித்து கேட்ட போது, விதிகளின்படி நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும், விதிகளை மீறி இந்த அரசில் எதுவும் நடக்காது என்றார்.


Next Story