துலே அருகே கோர விபத்து; தறிகெட்டு ஓடிய லாரி மோதி 10 பேர் பலி - படுகாயத்துடன் 20 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி


தினத்தந்தி 4 July 2023 7:00 PM GMT (Updated: 4 July 2023 7:00 PM GMT)

துலே அருகே தறிகெட்டு ஓடிய லாரி மோதிய கோர விபத்தில் 10 பேர் பலியானார்கள். படுகாயமடைந்த 20 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மும்பை,

துலே அருகே தறிகெட்டு ஓடிய லாரி மோதிய கோர விபத்தில் 10 பேர் பலியானார்கள். படுகாயமடைந்த 20 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தறிகெட்டு ஓடிய லாரி

மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து மராட்டிய மாநிலம் துலேக்கு நேற்று கன்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. இந்த லாரி காலை 10.45 மணியளவில் மும்பை- ஆக்ரா நெடுஞ்சாலையில் துலேயில் உள்ள பாலஸ்னர் கிராமம் அருகே வந்தது. அப்போது, திடீரென லாரியின் பிரேக் செயலிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் வேகமாக வந்த லாரி, அந்த வழியாக சென்று கொண்டு இருந்த கார், 2 மோட்டார் சைக்கிள்கள், மற்றொரு லாரி மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது. இதில் அந்த வாகனங்கள் நொறுங்கின. எனினும் லாரியின் வேகம் குறையவில்லை. மேலும் ரோட்டோர பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த பயணிகள், மாணவர்கள் மீது மோதிய லாரி அங்கு இருந்த ஓட்டலுக்குள் புகுந்து கவிழ்ந்தது.

10 பேர் பலி

நெஞ்சை பதற வைத்த இந்த பயங்கர விபத்தில் வாகனங்களில் இருந்தவர்கள், பஸ் நிறுத்தத்தில் நின்று இருந்தவர்கள், ஓட்டலில் இருந்தவர்கள் என சுமார் 30 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஷிர்பூர் மற்றும் துலேயில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள், பள்ளி மாணவர்கள் உள்பட 10 பேர் பலியானார்கள். படுகாயமடைந்த 20 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை புல்தானா பகுதியில் பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 25 பேர் உடல்கருகி பலியான நிலையில், தற்போது தறிகெட்டு ஓடிய லாரி மோதி 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story