அஜித்பவாரை திடீரென சந்தித்த உத்தவ் தாக்கரே - பேசியது என்ன?

துணை முதல்-மந்திரி அஜித்பவாரை நேற்று முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே திடீரென சந்தித்து பேசினார்.
மும்பை,
துணை முதல்-மந்திரி அஜித்பவாரை நேற்று முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே திடீரென சந்தித்து பேசினார்.
மேல்-சபை வந்த உத்தவ் தாக்கரே
மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மேல்-சபை உறுப்பினராக உள்ளார். அவர் நேற்று மேல்-சபைக்கு வந்து சபை நடவடிக்கைகளில் சிறிதுநேரம் கலந்து கொண்டார். மேல்-சபை துணை தலைவர் நீலம் கோரே, ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்த பிறகு உத்தவ் தாக்கரே முதல் முறையாக நேற்று சபை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அஜித்பவாருடன் திடீர் சந்திப்பு
மற்றொரு திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து துணை முதல்-மந்திரி பதவியேற்று இருக்கும் அஜித்பவாரை அவரது அலுவலகத்தில் உத்தவ் தாக்கரே திடீரென சந்தித்து பேசினார். அவருடன் அவரது மகனும், முன்னாள் மந்திரியுமான ஆதித்ய தாக்கரேயும் சென்று இருந்தார். பின்னர் உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் கூறியதாவது:-
கருவூலக சாவி
மாநிலத்தில் மக்களுக்கான சிறப்பான பணிகளை மேற்கொள்ளுமாறு நான் நிதி மந்திரி இலாகாவை கவனிக்கும் துணை முதல்-மந்திரியிடம் கேட்டுக்கொண்டேன். எனது தலைமையிலான மந்திரி சபையில் அவர் பணியாற்றி உள்ளார். அவர் செயல்படும் பாணியை நான் நன்கு அறிந்திருக்கிறேன். மாநில கருவூலகத்தின் சாவிகள் அவரிடம் உள்ளது. இதன்மூலம் மாநில மக்கள் உதவி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசில் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாக இருந்ததுடன், நிதி இலாகாவையும் கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.






