41 ஆயிரம் பெண்கள் மாயமானது குஜராத்தின் இருண்ட பக்கத்தை காட்டுகிறது- உத்தவ் தாக்கரே கட்சி கடும் தாக்கு


41 ஆயிரம் பெண்கள் மாயமானது குஜராத்தின் இருண்ட பக்கத்தை காட்டுகிறது- உத்தவ் தாக்கரே கட்சி கடும் தாக்கு
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் 41 ஆயிரம் பெண்கள் காணாமல் போனதாக வெளியான தரவு அந்த மாநிலத்தின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளதாக உத்தவ் தாக்கரே கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

மும்பை,

குஜராத்தில் 41 ஆயிரம் பெண்கள் காணாமல் போனதாக வெளியான தரவு அந்த மாநிலத்தின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளதாக உத்தவ் தாக்கரே கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

பெண்கள் மாயம்

தேசிய குற்ற ஆவண காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி குஜராத் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 41 ஆயிரம் பெண்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் அதிகளவில் பெண்கள் மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'வில் கூறியிருப்பதாவது:-

குஜராத் சொர்க்கம்

இந்தியாவில் காணாமல் போன பெண்கள் குறித்த தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் குஜராத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜனதாவின் மிகப்பெரிய ஓட்டைகளை அம்பலப்படுத்தி உள்ளது. குஜராத்தில் 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் மாயமாகி உள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்கான ஒரே முன்மாதிரி மாநிலம் குஜராத் தான் என்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச தலைவர்கள் மும்பைக்கும், டெல்லிக்கும் வருவதற்கு முன்பாக குஜராத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் சொர்க்கம் என்ற எண்ணம் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது காணாமல் போன பெண்கள் குறித்த தரவு அந்த மாநிலத்தின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.

நீதி கிடைக்குமா?

குஜராத்தில் சட்டத்தின் ஆட்சி நடந்தால் காணாமல் போன பெண்களுக்கு நீதி கிடைக்கும். இல்லையெனில் பெண்கள் காணாமல் போனதற்கும் அல்லது பெண்கள் கடத்தப்பட்டதற்கும் நேரு- காந்தி குடும்பத்தினர் தான் காரணம் என கூறி குற்றம் சாட்டப்படுவார்கள். பிரதமரின் "மன் கி பாத்" உரையின் மூலம் மக்கள் அதே பாதையில் வழிநடத்தப்படுவார்கள். மராட்டிய மாநிலத்திலும் ஒவ்வொரு நாளும் 70 பெண்கள் காணாமல் போவதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த 3 மாதங்களில் மாநிலத்தில் சுமார் 5 ஆயிரத்து 500 பெண்கள் காணாமல் போயுள்ளனர். அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி அரசியல் எதிரிகளை குறிவைப்பதற்கு பதிலாக, காணாமல் போன பெண்களை கண்டுபிடிக்க அந்த அமைப்புகளை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story