ரூ.10 கோடி கேட்டு மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு தொலைபேசியில் மிரட்டல்


ரூ.10 கோடி கேட்டு  மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு தொலைபேசியில் மிரட்டல்
x
தினத்தந்தி 22 March 2023 12:45 AM IST (Updated: 22 March 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

ரூ.10 கோடி கேட்டு மத்திய மந்திரி நிதின் கட்காரி அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பை அடுத்து, அவரது வீடு, அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

ரூ.10 கோடி கேட்டு மத்திய மந்திரி நிதின் கட்காரி அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பை அடுத்து, அவரது வீடு, அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

போனில் மிரட்டல்

பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நிதின் கட்காரி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவரது மக்கள் தொடர்பு அலுவலகம் மராட்டிய மாநிலம் நாக்பூர் ஆரஞ்சு சிட்டி ஆஸ்பத்திரி எதிரில் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு நேற்று காலை ஜெயேஷ் புஜாரி என்ற ஜெயேஷ் காந்தா என்பவர் போன் செய்தார். அவர் ரூ.10 கோடி தர வேண்டும் என கேட்டார். மேலும் பணம் கொடுக்காவிட்டால் நிதின் கட்காரியை தாக்குவேன் என மிரட்டினார்.

அவர் காலை 2 முறையும், மதியம் 12 மணியளவில் ஒரு முறையும் போன் செய்து மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அலுவலக ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பாதுகாப்பு அதிகரிப்பு

மிரட்டல் போன் அழைப்பு வந்ததை அடுத்து நாக்பூரில் உள்ள நிதின் கட்காரியின் வீடு, அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதின் கட்காரி அலுவலகத்துக்கு மிரட்டல் அழைப்பு வருவது இது 2-வது முறையாகும்.

கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி புஜாரி என கூறி ஒருவர் நிதின் கட்காரி அலுவலகத்துக்கு போன் செய்து ரூ.100 கோடி கேட்டு மிரட்டினார். அவர் தாவூத் இப்ராகிம் கூட்டாளி எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story