சீருடையில் வலைத்தளத்தில் வீடியோ பதிவேற்றம்; 2 ரெயில்வே போலீசார் பணி இடைநீக்கம்


சீருடையில் வலைத்தளத்தில் வீடியோ பதிவேற்றம்; 2 ரெயில்வே போலீசார் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 25 Oct 2023 7:00 PM GMT (Updated: 25 Oct 2023 7:01 PM GMT)

பணியின் போது சீருடையில் சமூகவலைத்தளத்தில் வீடியோ பதிவேற்றம் செய்த 2 ரெயில்வே போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மும்பை,

பணியின் போது சீருடையில் சமூகவலைத்தளத்தில் வீடியோ பதிவேற்றம் செய்த 2 ரெயில்வே போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

சீருடையில் வீடியோ

மும்பை மத்திய, மேற்கு ரெயில்வேயில் பணிபுரியும் போலீசார் சமூகவலைத்தளத்தில் வீடியோவை பதிவேற்றம் செய்து வருவதாக ரெயில்வே போலீஸ் கமிஷனர் ரவீந்திரா சிஸ்வேவிற்கு புகார் வந்தது. இதுபற்றி அவர் துணை கமிஷனர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் மேற்கு ரெயில்வேயில் பணிபுரிந்து வரும் பெண் போலீஸ் ஒருவர் பணி நேரத்தில் சீருடையில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் மற்றும் பிற வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வந்து உள்ளார். இதேபோல மத்திய ரெயில்வேயில் பணிபுரியும் போலீஸ்காரர் ஒருவரும் இதே பாணியை கடைபிடித்து வந்ததாக கமிஷனிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதனை தொடர்நது 2 போலீசாரும் அதிடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஒழுக்கமான பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் தங்கள் சீருடையின் கண்ணியத்தை காக்க வேண்டும் என்றும், வீடியோ பதிவேற்றம் செய்வதை தவிர்த்து பொதுமக்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபடலாம் என்றும் ரெயில்வே கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார்.

பயிற்சி வகுப்பு

இதேபோல வசாய் ரெயி்ல்வே போலீசில் பணியாற்றி வந்த 2 போலீசார் சேவை விதியை மீறி பயிற்சி வகுப்பு நடத்தி வந்ததாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து அவர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மேற்கண்ட 4 பேர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தவும் ரெயில்வே போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.


Next Story