வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளோம்; இந்தியாவில் பாதுகாப்பை உணரவில்லை - ஓடும் ரெயிலில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் மகன் வேதனை

இந்தியாவில் பாதுகாப்பை உணரவில்லை, வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளோம் என ஓடும் ரெயிலில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டவரின் மகன் வேதனை தெரிவித்தார்.
மும்பை,
இந்தியாவில் பாதுகாப்பை உணரவில்லை, வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளோம் என ஓடும் ரெயிலில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டவரின் மகன் வேதனை தெரிவித்தார்.
பயணிகள் சுட்டுக்கொலை
ஜெய்ப்பூர் - மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 31-ந் தேதி அதிகாலை மராட்டிய மாநிலம் பால்கர் அருகே வந்து கொண்டு இருந்தபோது ரெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் (ஆர்.பி.எப்.) வீரர் சேத்தன் சிங், தனது உயர் அதிகாரியான உதவி சப்-இன்ஸ்பெக்டர் திகாராம் மீனாவுடன் ஏற்பட்ட தகராறில் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார். மேலும் ரெயிலில் பயணம் செய்த அப்பாவி பயணிகள் 3 பேரை சுட்டுக்கொலை செய்து வெறிச்செயலில் ஈடுபட்டார். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கி துப்பாக்கியுடன் தப்பியோட முயன்ற அவரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். போலீசார் சேத்தன் கிங் மீது கொலை வழக்கு மட்டுமில்லாமல் இருபிரிவினர் இடையே மோதலை தூண்டுதல், ஆள்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சேத்தன் சிங் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பாக உணரவில்லை
இந்தநிலையில் ஓடும் ரெயிலில் சுட்டுக்கொல்லப்பட்ட காதன் பான்பூர்வாலா என்பவரின் மகன் உசேன் வேதனையுடன் கூறியதாவது:- நான் வழக்கை விசாரித்து வரும் மும்பை போலீஸ் நிலையத்துக்கு பல முறை சென்றேன். ஆனால் அவர்கள் எந்த ஒத்துழைப்பும் தரவில்லை. எனது தந்தை உள்ளிட்ட 3 அப்பாவி பயணிகள் எதற்காக கொல்லப்பட்டனர் என்ற கேள்விக்கு அதிகாரிகளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இங்கு எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. நாங்கள் ஏன் இங்கு இருக்க வேண்டும். எனது தாயை துபாய்க்கு அழைத்து செல்ல உள்ளோம். இங்கு திரும்பி வரும் எண்ணமில்லை. பிற மாநிலங்களை சேர்ந்த பா.ஜனதா அல்லாத அரசியல் கட்சிகள் எங்களுக்கு உதவி செய்ய முன்வந்தன. ஆனால் பா.ஜனதா ஆளும் மராட்டிய அரசு அமைதியாக இருப்பது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.






