சிறிய ரக வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்தால் சுங்கச் சாவடிகளை தீ வைத்து எரிப்போம் - ராஜ் தாக்கரே எச்சரிக்கை


சிறிய ரக வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்தால் சுங்கச் சாவடிகளை தீ வைத்து எரிப்போம் - ராஜ் தாக்கரே எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Oct 2023 12:15 AM IST (Updated: 10 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிறிய ரக வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலித்தால் சுங்கச் சாவடிகளை தீ வைத்து எரிப்போம் என மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே எச்சரித்து உள்ளார்.

மும்பை,

சிறிய ரக வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலித்தால் சுங்கச் சாவடிகளை தீ வைத்து எரிப்போம் என மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே எச்சரித்து உள்ளார்.

நவநிர்மாண் சேனா போராட்டம்

மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது. நேற்று முல்லுண்டு, தானே உள்ளிட்ட இடங்களில் கார், ஆட்டோ போன்ற சிறிய ரக வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என நவநிர்மாண் சேனாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த சிறிய ரக வாகனங்களை சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்ல வைத்தனர். இந்த விவகாரம் குறித்து நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அடுத்த 2 நாளில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயை சந்திக்க அனுமதி கேட்டு உள்ளேன். அந்த கூட்டத்தில் என்ன முடிவு கிடைக்கிறது என்று பார்ப்போம். அல்லது துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதை மனதில் வைத்து, நவநிர்மாண் சேனாவினர் சுங்க சாவடி பகுதிகளில் திரள்வார்கள். அவர்கள் கார், ஆட்டோ போன்ற சிறிய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்காமல் இருப்பதை உறுதி செய்வார்கள். நாங்கள் தடுக்கப்பட்டால், சுங்கச் சாவடிகளை தீ வைத்து எரிப்போம்.

அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்தும் இடம்

கடந்த சில ஆண்டுகளில் எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வந்துவிட்டன. ஆனாலும் யாரும் வாக்குறுதி அளித்தது போல மராட்டியத்தை சுங்கச்சாவடி இல்லாத மாநிலமாக மாற்றவில்லை. சுங்கச்சாவடிகள் பல அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்தும் இடமாகிவிட்டது. தினந்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் சுங்கச்சாவடிகளில் வசூலாகும் பணத்தில் அவர்களுக்கு பங்கு செல்கிறது. எனவே சுங்கச்சாவடிகள் ஒருபோதும் மூடப்படப்போவதில்லை. உங்களுக்கு நல்ல சாலையும் கிடைக்கப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story