மராட்டியத்தில் 15 சதவீத இதர பிற்படுத்தப்பட்டோர் இடங்கள் காலியாக உள்ளது ஏன்? - விஜய் வடேடிவார் கேள்வி


மராட்டியத்தில் 15 சதவீத இதர பிற்படுத்தப்பட்டோர் இடங்கள் காலியாக உள்ளது ஏன்? - விஜய் வடேடிவார் கேள்வி
x
தினத்தந்தி 2 Oct 2023 7:30 PM GMT (Updated: 2 Oct 2023 7:31 PM GMT)

மராட்டியத்தில் 15 சதவீத இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளது ஏன்? என காங்கிரஸ் தலைவர் விஜய் வடேடிவார் கேள்வி எழுப்பி உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் 15 சதவீத இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளது ஏன்? என காங்கிரஸ் தலைவர் விஜய் வடேடிவார் கேள்வி எழுப்பி உள்ளார்.

பா.ஜனதா பேரணி

மராத்தா சமூகத்தினருக்கு இதர பிற்படுத்தப்பட்டவர்கள் சான்றிதழ் வழங்கும் அரசின் முடிவுக்கு எதிராக இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தநிலையில் வார்தா மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் விழிப்புணர்வு பேரணியை பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவான்குலே நேற்று நடத்தினர். இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் நேற்று கூறியதாவது:-

காலியான 15 சதவீதம்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சமூகங்களுக்கு அரசு வேலைகளில் 27 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இருப்பினும் இதில் வெறும் 12 சதவீத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 15 சதவீத இடங்கள் ஏன் காலியாக வைக்கப்பட்டுள்ளது?. ரகசியமாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக சந்திரசேகர் பவான்குலே ஏதேனும் நடவடிக்கை எடுக்க கோருவாரா?. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் வைப்பாரா?.

அரசியல் இடஒதுக்கீடு

உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் இடஒதுக்கீடு மீண்டும் வழங்கப்படும் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்திருந்தார். ஆட்சிக்கு வந்து 1½ ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் தனது வாக்குறுதியை காப்பாற்றுவாரா?. தற்போதைய ஆட்சியாளர்களால் அரபிக்கடலில் சிவாஜி மகாராஜாவின் நினைவிடம் கூட அமைக்க முடியவில்லை. ஆனால் இப்போது இங்கிலாந்தில் இருந்து சத்ரபதி சிவாஜியின் வாக்நாக் என்ற புலி நக ஆயுதத்தை கொண்டு வருவது பற்றி ஆலோசித்து வருகின்றனர். வாக்குகளை பெற இது ஒரு புதிய தந்திரம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story