ஓடும் ரெயிலில் 4 பேரை சுட்டுக்கொன்றது ஏன்? - கொலையாளி பேசும் பரபரப்பு வீடியோ வைரல்


ஓடும் ரெயிலில் 4 பேரை சுட்டுக்கொன்றது ஏன்? - கொலையாளி பேசும் பரபரப்பு வீடியோ வைரல்
x
தினத்தந்தி 1 Aug 2023 1:00 AM IST (Updated: 1 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் 4 பேரை ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்த திடுக்கிடும் தகவல்களும், கொலையாளி பேசும் அதிர்ச்சி வீடியோவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை,

ஓடும் ரெயிலில் 4 பேரை ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்த திடுக்கிடும் தகவல்களும், கொலையாளி பேசும் அதிர்ச்சி வீடியோவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணை

ஜெய்ப்பூர்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று தனது மேல் அதிகாரியான உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பயணிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் சேத்தன் சிங்கை, மும்பையை அடுத்த மிரா ரோடு ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகின. ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் சேத்தன் சிங் அதிகாலை 5 மணியளவில் ரெயிலின் பி-5 ஏ.சி. பெட்டியில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் திகா ராம் மீனா மற்றும் ஒரு பயணியை தனது தானியங்கி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார். பின்னர் அவர் ரெயிலின் மற்ற பெட்டிகளுக்கு துப்பாக்கியை எடுத்து சென்று இருக்கிறார். அவர் எஸ்-6 பெட்டியில் ஒரு பயணியையும், பி-5 மற்றும் எஸ்-6 இடையே உள்ள பேன்டரி கார் பெட்டியில் ஒரு பயணியையும் சுட்டுக்கொலை செய்துள்ளார்.

12 ரவுண்டு சுட்டார்

இந்த கொடூர சம்பவத்தின் போது ரெயில் வாபியை கடந்து, மராட்டிய மாநிலம் பால்கர் பகுதியில் உள்ள வைத்தர்னா ரெயில் நிலையப்பகுதியில் வந்ததாக கூறப்படுகிறது. சேத்தன் சிங் அவரது துப்பாக்கியால் 12 முறை சுட்டு உள்ளார். பின்னர் அவர் 5.59 மணியளவில் மிரா ரோடு - தகிசர் இடையே அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தி உள்ளார். அவர் தனது துப்பாக்கியுடன் ரெயிலில் இருந்து இறங்கி தப்பி சென்றார். அவரை ரெயில்வே போலீசார் மிரா ரோடு பகுதியில் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது அவரது துப்பாக்கியில் 8 தோட்டாக்கள் மீதம் இருந்தன.

பரபரப்பு வீடியோ

சேத்தன் சிங் கொலை செய்த ஒரு பயணியின் உடல் முன் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக பயணிகள் மத்தியில் இந்தியில் பேசும் வீடியோவும் சமூகவலைதளங்களில் பரவிவருகிறது. இதுதொடர்பாக ரெயில்வே போலீஸ் கமிஷனர் ரவீந்திர சிஷ்வே கூறுகையில், " மற்ற ஆதாரங்களுடன் குறிப்பிட்ட வீடியோவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியாது. தற்போது அந்த வீடியோ பற்றி கருத்து கூறுவதோ அல்லது விசாரணை குறித்து பேசுவதோ சரியாக இருக்காது. ஓடும் ரெயிலில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை. பயணிகள் பயத்தில் உள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்துவார்கள் என்பதை உறுதியாக கூறுகிறேன்" என்றார். மேலும் மேற்கு ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. பிரவீன் சின்கா கூறுகையில், "கைதான சேத்தன் சிங்கிற்கு மூக்கு நுனியில் கோபம் வரும். கடுங்கோபக்காரர். ரெயிலில் வாக்குவாதம் எதுவும் ஏற்படவில்லை. அவர் நிதானத்தை இழந்து மேல் அதிகாரியை சுட்டுவிட்டு, பார்ப்பவர்களை எல்லாம் சுட்டு உள்ளார். அவர் மீது கொலை மற்றும் ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது " என்றார். மற்றொரு அதிகாரி சேத்தன் சிங் மனநல பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறினார்.

கருணை அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தவர்

வெறிச்செயலில் ஈடுபட்ட வீரர் சேத்தன் சிங், உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசை சேர்ந்தவர். இவர் 12 ஆண்டுகளுக்கு முன் கருணை அடிப்படையில் ரெயில்வே பாதுகாப்பு படையில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த மார்ச் மாதம் பாவ்நகர் மண்டலத்தில் இருந்து மும்பைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் 12 நாள் விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு சென்ற சேத்தன் சிங் கடந்த 17-ந் தேதி தான் பணிக்கு திரும்பி உள்ளார். பணிக்கு திரும்பி வந்த 2 வாரத்தில் அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு உள்ளார். சேத்தன் சிங்கிற்கு மனைவி மற்றும் 6, 8 வயதில் இரு பிள்ளைகள் உள்ளனர்.

1 More update

Next Story