பா.ஜனதா எம்.பி. நடிகர் சன்னிதியோலின் பங்களா ஏல நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டது ஏன்? - காங்கிரஸ் கேள்வி


பா.ஜனதா எம்.பி. நடிகர் சன்னிதியோலின் பங்களா ஏல நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 21 Aug 2023 7:45 PM GMT (Updated: 21 Aug 2023 7:46 PM GMT)

பா.ஜனதா எம்.பி. நடிகர் சன்னிதியோலின் பங்களா ஏலம் விடப்படுவது தொடர்பான நோட்டீசை வாபஸ் பெற உத்தரவிட்டது யார்? என்று காங்கிரஸ் கேள்வி விடுத்துள்ளது.

மும்பை,

பா.ஜனதா எம்.பி. நடிகர் சன்னிதியோலின் பங்களா ஏலம் விடப்படுவது தொடர்பான நோட்டீசை வாபஸ் பெற உத்தரவிட்டது யார்? என்று காங்கிரஸ் கேள்வி விடுத்துள்ளது.

ரூ.56 கோடி கடன்

பிரபல இந்தி நடிகர் சன்னிதியோல், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் பா.ஜனதா சார்பில் வெற்றி பெற்றார். சன்னிதியோல், பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவில் ரூ.55 கோடியே 99 லட்சம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் அதை திருப்பி செலுத்தவில்லை. இதனால், பேங்க் ஆப் பரோடா வங்கி நிர்வாகம், கடனை திருப்பிச் செலுத்த தவறிய சன்னிதியோலின் மும்பை ஜூஹு பகுதியில் உள்ள 'சன்னி வில்லா' என்ற பங்களாவை செப்டம்பர் 25-ந் தேதி ஆன்லைனில் ஏலம் விட முடிவு செய்தது. இதற்கான ஆன்லைன் ஏல நோட்டீஸ் நேற்று முன்தினம் பிரபல நாளிதழ்களில் வெளியானது.

வாபஸ்

ஆனால், நேற்று அந்த நோட்டீஸ் வாபஸ் பெறப்படுவதாக பேங்க் ஆப் பரோடா அறிவித்தது. தொழில்நுட்ப காரணங்களால் அது வாபஸ் பெறப்படுவதாக தெரிவித்தது. மறுநாளே எடுக்கப்பட்ட வாபஸ் நடவடிக்கை பற்றி வங்கி நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ''நடிகர் சன்னிதியோல், வங்கி நிர்வாகத்தை தொடர்பு கொண்டார். கடன் பாக்கியை செலுத்த முன்வந்துள்ளார்'' என்று கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கேள்வி

இந்நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதி இருப்பதாவது:- கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், நடிகர் சன்னிதியோல் பங்களா ஏலம் விடப்பட உள்ளதாக நாடு தெரிந்து கொண்டது. 24 மணி நேரம் முடிவதற்குள், அந்த நோட்டீஸ், தொழில்நுட்ப காரணங்களுக்காக வாபஸ் பெறப்பட்டுள்ளது. தொழில்நுட்ப காரணங்களை உருவாக்கியது யார்? இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதுபற்றி வங்கி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, எந்த காரணமும் சொல்ல மறுத்து விட்டது.


Next Story