தங்கள் கணவர்களை மீட்டு வருமாறு ராஷ்மி தாக்கரேவிடம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவிமார் கோரிக்கை- முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேகர் தகவல்

ராஷ்மி தாக்கரேவிடம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவிமார்கள் தங்கள் கணவர்களை மீட்டு வருமாறு கோரிக்கை வைத்துள்ளதாக முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேகர் கூறினார்.
மும்பை,
சிவசேனா கட்சியியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடந்த 5 நாட்களாக அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளனர். இதனால் ஆளும் சிவசேனா ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவிகளை தொடர்பு கொண்டு அவர்களை திரும்ப அழைத்து வர முயற்சி செய்வதாக வெளியான தகவல் குறித்து முன்னாள் மும்பை மேயர் கிஷோரி பெட்னேகரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
"ராஷ்மி தாக்கரே கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் குடும்பங்களுடன் நல்ல உறவை கொண்டுள்ளார்.
கணவர்களை திரும்பி வர சொல்ல அவர் எம்.எல்.ஏ.க்களின் மனைவிகளை அழைத்ததாக எனக்கு ஏதும் தெரியவில்லை. மாறாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவிகள் தங்கள் கணவர்களை மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு ராஷ்மி தாக்கரேவை தொடர்புகொண்டு பேசியதை நான் அறிவேன். அனைவருடனான அவரது உறவு அரசியலுக்கு அப்பாற்றப்பட்டதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.






