வசாயில் வீடுகளில் புகுந்து திருடிய பெண்- சிறுமி கைது

வசாயில் வீடுகளில் புகுந்து திருடிய பெண், சிறுமி கைது செய்யப்பட்டனர்.
வசாய்,
பால்கர் மாவட்டம் வசாய் ரோடு கிழக்கு எவர்சைன் ரோடு பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த 7-ந் தேதி முதல் 23-ந்தேதி வரை திருட்டு போனதாக அச்சோலே போலீசுக்கு புகார் வந்தது. இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.8 லட்சத்து 36 ஆயிரம் ரொக்கம், ரூ.1 லட்சம் நகைகள் போன்றவை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் பெண் மற்றும் சிறுமி ஆகிய 2 பேர் தான் வீடுகளில் புகுந்து திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் பெண், சிறுமியை பிடித்து கைது செய்தனர். திருடப்பட்ட பணத்தை வைத்து விலை உயர்ந்த செல்போன், மோட்டார் சைக்கிள் உள்பட எலக்ட்ரானிக் போன்ற பொருட்களை வாங்கி ஆடம்பரமாக செலவு செய்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் உள்பட ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.






