ஓடும் ரெயிலில் பெண்ணை தாக்கி, மானபங்கம் செய்தவர் கைது

பெண்கள் பெட்டியில் தனியாக பயணம் செய்த பெண் பயணியை தாக்கி, மானபங்கம் செய்து நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
பெண்கள் பெட்டியில் தனியாக பயணம் செய்த பெண் பயணியை தாக்கி, மானபங்கம் செய்து நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பயணியை தாக்கி நகை பறிப்பு
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் பகுதியை சேர்ந்த 32 வயது பெண் கர்நாடக மாநிலம் குண்டாபூரில் இருந்து மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தார். அவர் ரெயிலின் பெண்கள் பெட்டியில் பயணம் செய்தார். ரெயில் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் தானே வந்தது. அப்போது அந்த பெட்டியில் இருந்த 2 பெண்கள் இறங்கிவிட்டனர். 32 வயது பெண் மட்டும் தனியாக இருந்தார். இந்தநிலையில் ரெயில் புறப்பட்ட நேரத்தில், அந்த பெண்கள் பெட்டியில் 30 வயது வாலிபர் ஏறினார். அவரை பார்த்தவுடன் பெண் பயணி அவரை கீழே இறங்குமாறு கூறினார். ஆனால் அவர் பெண் பயணியை மிரட்டினார். பயந்துபோன பயணி போலீசாருக்கு தகவல் கொடுக்க செல்போனை எடுத்தார்.
ஆத்திரமடைந்த வாலிபர் பெண் பயணியை சரமாரியாக தாக்கினார். மேலும் மானபங்கம் செய்தார். இந்தநிலையில் ரெயில் காஞ்சூர்மார்க் அருகே மெதுவாக சென்ற போது வாலிபர் பெண்ணின் கழுத்தில் கிடந்த ரூ.75 ஆயிரம் மதிப்பிலான தாலி சங்கிலியை பறித்துவிட்டு கீழே குதித்து ஓடினார்.
வாலிபர் கைது
இதையடுத்து பெண் அபாய சங்கிலியை பிடித்து ரெயிலை நிறுத்தினார். ரெயில்வே போலீசார் வாலிபர் தாக்கியதில் காயமடைந்த பெண்ணை சிகிச்சைக்காக சயான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் பெண் பயணியை தாக்கி, மானபங்கம் செய்து நகை பறித்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் கைதான வாலிபர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அவர் கொரோனா காலத்தில் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.






