ரத்னகிரி மாவட்டத்தில் பெட்ரோ-கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலை அமைக்க கடும் எதிர்ப்பு- போராடிய பெண்கள் கைது

ரத்னகிரி மாவட்டம் பார்சு பகுதியில் பெட்ரோ-கெமிக்கல் சுத்திரிகரிப்பு ஆலை அமைக்க கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மண் ஆய்வு பணிக்காக வந்த அதிகாரிகளை தடுக்கும் வகையில் சாலையில் படுத்து போராடிய பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
ரத்னகிரி மாவட்டம் பார்சு பகுதியில் பெட்ரோ-கெமிக்கல் சுத்திரிகரிப்பு ஆலை அமைக்க கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மண் ஆய்வு பணிக்காக வந்த அதிகாரிகளை தடுக்கும் வகையில் சாலையில் படுத்து போராடிய பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோ-கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலை
ரத்னகிரி மாவட்டம் நானாரில் பெட்ரோ-கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலை அமைக்க கடந்த தேவந்திர பட்னாவிஸ் ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போது கூட்டணியில் இருந்த சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த திட்டம் கைவிடப்பட்டது.
பின்னர் உத்தவ் தாக்கரே அரசாங்கம் இதே ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள பார்சுவை திட்டத்திற்கான மாற்று இடமாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதன் அடிப்படையில் பார்சு கிராம பகுதியில் பிரமாண்டமான அளவில் பெட்ரோ-கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலை அமைக்க தற்போதைய ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
சாலையில் படுத்து போராட்டம்
இதற்காக மண் ஆய்வு செய்யும் பணியை மேற்கொள்ள நேற்று அதிகாரிகள் சென்றனர். இதை அறிந்த பார்சு கிராம மக்கள் திட்டம் அமைய உள்ள இடத்தில் குவிந்தனர். மேலும் அதிகாரிகளை உள்ளே விடாமல் சாலையில் படுத்து அவர்களது வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தை கைவிடுமாறு அவர்கள் பொதுமக்களை சமரசப்படுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் செவிசாய்க்கவில்லை. மாறாக பெண்கள் முன்னணியில் நின்று போராட்டத்தை நடத்தினர். இந்த சுத்திரிகப்பு ஆலை திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கோஷமிட்டனர்.
பெண்கள் கைது
அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால், 30 -க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், பெண்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைதானவர்கள் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.
இதனால் போராட்டக்களம் பரபரப்பை எட்டியது.
போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சஞ்சய் ராவத், ஆதித்ய தாக்கரே
இது தொடர்பாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி. கூறுகையில், "இது ஒரு வக்கிரமான மனநிலை கொண்ட அரசாங்கம். ஜாலியன் வாலாபாக் போன்ற படுகொலையை அவர்கள் விரும்புகிறார்கள். உள்ளூர் போராட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறையை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த பிரச்சினையில் எங்களால் அமைதி காக்க முடியாது. போராடும் மக்களுக்கு ஆதரவாக இருப்போம். ஷிண்டே விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அவரது ஹெலிகாப்டரில் பார்சி பகுதிக்கு திரும்ப வேண்டும். அவர் மக்கள் பிரச்சினைகளை கேட்க வேண்டும்" என்றார்.
முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே கூறுகையில், "மக்கள் மீதான அட்டூழியங்களை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். மண் ஆய்வு பணியையும் நிறுத்த வேண்டும். உள்ளூர் மக்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்" என்றார்.
கவனத்துடன் கையாள வேண்டும்
இதேபோல சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார் கூறியதாவது:-.
ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். உள்ளூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்த பிரச்சினையை அரசு கவனத்துடன் கையாள வேண்டும்
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அதுவரை, சுத்திகரிப்பு திட்டத்திற்கான ஆய்வு பணியை நிறுத்தி வைக்க வேண்டும். எங்களது கட்சி வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ளது. அதே நேரத்தில், இந்த திட்டம் சுற்றுச்சூழலை மோசமாக பாதிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.






