மகாராஷ்டிரா பவன் கட்ட இடம் வழங்க யோகி ஆதித்யநாத் ஒப்புதல்- ஏக்நாத் ஷிண்டே தகவல்

அயோத்தியில் மகாராஷ்டிரா பவன் கட்ட இடம் வழங்க உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்து உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
மும்பை,
அயோத்தியில் மகாராஷ்டிரா பவன் கட்ட இடம் வழங்க உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்து உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
யோகி ஆதித்யநாத் ஒப்புதல்
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. அயோத்தியில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி ராமர் கோவில் திறக்கப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்து உள்ளார். உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக மும்பை வந்து இருந்தார். அப்போது அவர் தொழில் அதிபர்கள், சினிமா துறையினரை சந்தித்து பேசினார்.
இந்தநிலையில் யோகி ஆதித்யநாத் மும்பை வந்த போது, அயோத்தியில் மகாராஷ்டிரா பவன் கட்ட இடம் வழங்க ஒப்புதல் அளித்ததாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
ராஜ்பவனில் சந்திப்பு
மும்பை ராஜ்பவனில் கடந்த புதன் கிழமை மாலை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்தித்தேன். அயோத்தியில் மகாராஷ்டிரா பவன் கட்ட இடம் ஒதுக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டார். அயோத்தியில் மகாராஷ்டிரா பவன் கட்ட அவா் ஒப்புதல் அளித்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அயோத்தியில் கட்டப்பட உள்ள மகாராஷ்டிரா பவன், மாநிலத்தில் இருந்து ராமர் கோவில் செல்லும் பக்தர்கள் தங்கும் வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.






