சாய்னா நேவாலை வீழ்த்திய பி.வி. சிந்து சர்ச்சைக்குரிய கருத்து


சாய்னா நேவாலை வீழ்த்திய பி.வி. சிந்து சர்ச்சைக்குரிய கருத்து
x
தினத்தந்தி 2 April 2017 4:55 AM GMT (Updated: 2 April 2017 4:55 AM GMT)

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் கால்இறுதியில் சாய்னா நேவாலை வீழ்த்திய பி.வி. சிந்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளார்.

ஐதராபாத்,

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரங்கள் பி.வி.சிந்துவும், சாய்னா நேவாலும் பலப்பரீட்சையில் இறங்கினர். 
பேட்மிண்டனில் இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை யார்? என்பதில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் சொந்த மண்ணில் அரங்கேறிய இந்த மோதல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடக்கம் முதலே இருவரும் ஆக்ரோ‌ஷமாக விளையாடினர். இருப்பினும் அனுபவ வீராங்கனையான சாய்னா நேவால் நேர் செட்டில் சிந்துவிடம் வீழ்ந்தார். 

சாய்னா நேவால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அப்போது அவருடைய காலில் அடிப்பட்டது, இதனையடுத்து ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ஆப்ரேஷன் நடந்த பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப போராடி வருகிறார். மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் அபாரம் காட்டி பட்டம் வென்றார். அதன்பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நீண்ட காலமாக நம்பர் ஒன் வீராங்கனை என்ற பெயரை தனதாக்கிய சாய்னாவும் இந்தியாவிற்கு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வாங்கி தந்தவர். 
 
இந்நிலையில் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் சாய்னாவை வீழ்த்தியது குறித்து கருத்து தெரிவித்த பி.வி.சிந்து, "கட்டாயமாக வெற்றி பெற்ற ஆக வேண்டும் என எண்ணும் அளவுக்கு சாய்னா ஒன்றும் சிறப்பான வீராங்கனை இல்லை. அவரும் மற்ற வீராங்கனைகளைப் போல் தான் யாருக்கு எதிராக களம் கண்டாலும் தனது முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன்" என்று பி.வி.சிந்து குறிப்பிட்டிருந்தார். கட்டாயம் வீழ்த்தியாக வேண்டும் என்ற அளவுக்கு சாய்னா ஒன்றும் விசேஷமான வீராங்கனை இல்லை என்று சாய்னா நேவால் குறித்து பி.வி. சிந்து தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.


Next Story