சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் சூப்பர் சீரீஸ்: இந்திய வீரர் சாய் பிரனீத் சாம்பியன்


சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் சூப்பர் சீரீஸ்: இந்திய வீரர் சாய் பிரனீத் சாம்பியன்
x
தினத்தந்தி 16 April 2017 10:02 AM GMT (Updated: 16 April 2017 10:02 AM GMT)

சிங்கப்பூர் பேட்மிண்டன் சீரிஸில் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி, சாய் பிரனீத் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

சிங்கப்பூர், 

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி அங்கு நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 30–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சாய் பிரனீத், 35–ம் நிலை வீரரான தென்கொரியாவின் லீ டோங் குன்னை சந்தித்தார். 38 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாய் பிரனீத் 21–6, 21–8 என்ற நேர்செட்டில் லீ டோங் குன்னை எளிதில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாய் பிரனீத்–ஸ்ரீகாந்த் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்கள். இறுதிச்சுற்றில் சகநாட்டு வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பியை 17-21, 21-17, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாய் பிரனீத் வெற்றி பெற்றார்.

சாய் பிரனீத் வெல்லும் முதல் சர்வதேச சூப்பர் சீரிஸ் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் சாய் பிரனீத் 4 முறையும், ஸ்ரீகாந்த் ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளனர். சீனா, இந்தோனேஷியா, டென்மார்க் ஆகிய 3 நாடுகளை சேர்ந்த வீரர்கள் மட்டுமே இதுவரை இறுதிப்போட்டியில் சந்தித்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ் போட்டி வரலாற்றில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் 2 இந்திய வீரர்கள் மோதியது இதுவே முதல்முறையாகும். 

Next Story