காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சென்ற 2 இந்தியர்கள் வெளியேற்றம்


காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சென்ற 2 இந்தியர்கள் வெளியேற்றம்
x
தினத்தந்தி 13 April 2018 8:43 AM IST (Updated: 13 April 2018 8:43 AM IST)
t-max-icont-min-icon

விதிகளை மீறி நடந்து கொண்டது தெரியவந்ததையடுத்து, காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சென்ற 2 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கோல்டு கோஸ்ட், 

உலகின் 3-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரான கோல்ட்கோஸ்டில் ஏப்ரல் 4 ஆம் தேதி தொடங்கியது. இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த போட்டியில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 வீரர், வீராங்கனைகள் அனுப்பப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்க சென்றுள்ள இந்திய வீரர்கள் கோல்டு கோஸ்ட் விளையாட்டு கிராமத்தில் தங்கியுள்ளனர். 

இந்த நிலையில், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சென்ற இந்திய வீரர்கள் இரண்டு பேர், விளையாட்டு கிராமத்தில் இருந்து  வெளியேற்றப்பட்டுள்ளனர். ராகேஷ் பாபு மற்றும் இர்பான் கொலாதும் தோடி ஆகிய இருவரும் காமன்வெல்த் விளையாட்டுவிதிகளை மீறியது கண்டறியப்பட்டதையடுத்து இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்திய வீரர்கள் இருவரும் தங்கியிருந்த குடியிருப்பில் இருந்த. கப்  ஒன்றில் ஊசிகள் இருந்ததை சுத்தம் செய்யும் பணியாளர்கள் கண்டறிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து, விதிகளை மீறியதாக இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடப்பு காமன்வெல்த் போட்டியில் “நோ நீடில் பாலிசி” விதிகளை மீறியதாக இந்தியா மீது குற்றம் எழுவது இது இரண்டாவது முறையாகும். காமன்வெல்த் போட்டியின் துவக்க நாளின் போது, இந்திய பாக்சிங் அணியின் மருத்துவர், பயன்படுத்தப்பட்ட ஊசிகளை  முறையாக அப்புறப்படுத்தவில்லை என கண்டனத்துக்குள்ளானார். இதையடுத்து, இந்திய அணித்தலைவர் விக்ரம் சிசோடியா, விதிகள் மீறப்பட்டால் அனுமதி ரத்து செய்யப்படும் என்று எச்சரித்து இருந்தார். 


Next Story