"கேலோ இந்தியா" திட்டத்தில் 734 வீரர்கள் தேர்வு - மத்திய அரசு


கேலோ இந்தியா திட்டத்தில் 734 வீரர்கள் தேர்வு - மத்திய அரசு
x
தினத்தந்தி 22 July 2018 8:16 AM GMT (Updated: 22 July 2018 8:22 AM GMT)

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 734 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. #CentralGovernment

புதுடெல்லி,

விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் "கேலோ இந்தியா" திட்டம் செயல்பட்டு வருகிறது.

மத்தியில் கடந்த 2014ம் ஆண்டு பாஜக அரசு அமைந்ததும் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் கேலோ இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க உதவி வழங்கப்பட்டு வருகிறது.

மிகப் பெரிய மக்கள் தொகை உள்ள நம் நாடு சர்வதேசப் போட்டிகளில் மிகவும் குறைந்த அளவே பதக்கங்களை பெற்று வருகிறது. விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கவும், சிறந்தப் பயிற்சி மற்றும் அதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், 'கேலோ இந்தியா' என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லும் அளவுக்கு வீரர்களை உருவாக்கும் வகையில், திறமை உள்ளவர்களை இளம் வயதிலேயே கண்டறிந்து பயிற்சி அளிக்கும் திட்டமாக கேலோ இந்தியா செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், "கேலோ இந்தியா" திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 734 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வான வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story