ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்தனர் சாய்னா, பிவி சிந்து


ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்தனர் சாய்னா, பிவி சிந்து
x
தினத்தந்தி 26 Aug 2018 9:59 AM GMT (Updated: 26 Aug 2018 10:49 AM GMT)

ஆசிய விளையாட்டு போட்டியின் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் அரைஇறுதிக்கு தகுதி பெற்று இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதிசெய்தனர். #AsianGames2018 #SainaNehwal #Sindhu

ஜகார்த்தா,

ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாய்னா நேவால், தாய்லாந்து வீராங்கனை இன் ரட்சானோக் இன்டானோனை எதிர்கொண்டார். போட்டியில் தொடக்கம் இந்தியர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் விதமாக இருந்தது, சாய்னா நேவால் 3-11 என்ற கணக்கில் பின் தங்கியிருந்தார். இதனையடுத்து நேர்த்தியான ஆட்டம் மூலம் புள்ளிகளை பெற்று இந்திய வீரர்களை குஷிப்படுத்தும் விதமாக அபாரம் காட்டினார். முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் தனதாக்கினார். ரட்சானோக்கும் சிறப்பான போட்டியை கொடுத்தார். இதனையடுத்து இரண்டாவது செட் ஆட்டமும் விறுவிறுப்பாக சென்றது போட்டியை 21-16 என்று முடிவுக்கு கொண்டுவந்து அரையிறுதிக்கு முன்னேறினார் சாய்னா நேவால்.

மற்றொரு காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிவி சிந்து தாய்லாந்து வீராங்கனை நிட்சான் ஜிண்டாபாலை எதிர்கொண்டார். போட்டியின் முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய பிவி சிந்து 21-11 என்ற கணக்கில் செட்டை தனதாக்கினார். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜிண்டாபால் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். பிவி சிந்துவின் தவறுகளை தனதாக்கி ஆட்டத்தை 21-16 என்று தன்வசப்படுத்தினார் ஜிண்டாபால். இதனையடுத்து ஆட்டம் வெற்றியை நிர்ணயம் செய்யும் மூன்றாவது செட்டை நோக்கி சென்றது. 

அனுபவ வீராங்கனையான பிவி சிந்து போட்டியை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை, 21-14 என்ற கணக்கில் ஜிண்டாபாலை ஊதித்தள்ளி அரையிறுதிக்கு முன்னேறினார். பிவி சிந்துவும், சாய்னாவும் அரையிறுதிக்கு முன்னேறியதால் இந்தியாவிற்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.

Next Story